குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாஞ்சப் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மட்ச் வின்னராக ஷஷாங் சிங் ஜொலித்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குழப்பத்துக்கு மத்தியில் ஷஷாங் சிங்கை வாங்கி இருந்தது பஞ்சாப் அணி நிர்வாகம். ஷஷாங் சிங் என்ற ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் 32 வயதான ஷஷாங்கை பஞ்சாப் அணி, ரூ.20 லட்சத்துக்கு வாங்கி இருந்தது.
அடுத்த சில நொடிகளில் தவறான வீரரை வாங்கியதை அறிந்து அவரை திருப்பி கொடுக்கும் முடிவிலிருந்த பஞ்சாப் நிர்வாகம், தங்கள் அணியின் வீரராக பின்னர் ஏற்றுக் கொண்டது. இது குறித்து பஞ்சாப் அணி விளக்கமும் கொடுத்தது.
32 வயதான அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார். துடுப்பட்ட சகலதுறை வீரர். உள்ளூர் அளவிலான ரி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடி உள்ளார். குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்த போதும் பொறுப்புடன் ஆடி 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
“நான் இது போன்ற இன்னிங்ஸை நினைத்து பார்த்தது உண்டு. அதை இப்போது மெய்பிக்க செய்ததில் சிறப்பாக உணர்கிறேன். வழக்கமாக பேட்டிங் ஓர்டரில் நான் 7ஆம் இடத்தில் களம் காண்பேன். இந்தப் போட்டியில் 5ஆம் இடத்தில் ஆடினேன். இரண்டு அணிகளும் தலா 200 ரன்கள் குவித்தது அருமை. பந்துக்கு ஏற்ப நான் ரியாக்ட் செய்தேன். அதற்கான சரியான ஷாட்களை ஆடினேன்.
இதற்கு முன்னர் அதிக ஆட்டங்களில் விளையாடியது இல்லை. பஞ்சாப் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் என்னை சப்போர்ட் செய்கின்றனர். எனக்கு அது நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என குஜராத் உடனான ஆட்டத்துக்கு பிறகு ஷஷாங் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஹைதராபாத், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.