ஐந்து வருடங்களுக்கு முன்னர் 263 உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் வாக்குமூலம் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதால், நாளை (25) அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி ஜன பலவேகய கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.
படுகொலைகள் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும், குற்றம் தொடர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி வெளியிடத் தவறியமையின் அடிப்படையிலேயே தமது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக டொக்டர் ஜயவர்தன தெரிவித்தார். அவர் முன்பு ஆஜரான கமிஷன்களுக்கு தகவல்களை வெளியிடத் தவறிவிட்டார், மேலும் அவரது சமீபத்திய அறிக்கையால் பொதுமக்கள் ஆத்திரமடையக்கூடும். மைத்தரியின் புதிய கூற்று குறித்து சிஐடியிடம் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தாம் அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மைத்திரியின் அறிக்கை குறித்து விசாரிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி, திருச்சபை சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அறிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், மூன்று வாரங்களுக்கு முன்புதான் புதிய தகவல் கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை, அவர் ஆரம்பக் கருத்தை வெளியிட்டபோது, எப்போது தகவல் கிடைத்தது என்பதை அவர் வெளியிடவில்லை.
கண்டி கெடிகே விகாரையில் (அதஹன மாலுவ) ‘தர்ம மந்திரிய’ திறப்பு விழாவின் பின்னர் மைத்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து நீதிபதிகளிடம் ரகசிய அறிக்கையை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய வெளிப்பாடுகளை இரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பு என்றும் மைத்திரி கூறினார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தாம் முன்னர் குறிப்பிட்ட நபர்களே எனவும், நீதித்துறையின் உத்தரவின் பேரில் உண்மையான குற்றவாளிகளை தாம் பெயரிட முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.




