சில்ஹெட்டில் நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய சில்வா, காமிந்து மெண்டிஸ் சதமடித்துள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் இலங்கை தடுமாறிய போது, இந்த ஜோடியே சதமடித்து அணியை காப்பாற்றியது. இரண்டவது இன்னிங்ஸிலும் அவர்கள் சதமடித்து, இலங்கை வலுவான ஸ்கோரை நோக்கி நகர பங்களித்துள்ளனர். சற்று முன்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 418 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது.
இதன்மூலம், பங்களாதேஷிற்கு 510 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸிலும், காமிந்து மெண்டிஸ், தனஞ்ஜய சில்வா சதமடித்தனர்.
காமிந்து மெண்டிஸ் 164 ஓட்டங்களை பெற்று, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரின் அதிகபட்ச ஓட்டங்கள் இதுதான். கடைசிக்கட்டத்தில் பந்துவீச்சாளர்களுடன் காமிந்து பெற்ற இணைப்பாட்டம் இலங்கையை பாதுகாப்பான நிலைமைக்கு கொண்டு சென்றது.
முன்னதாக தனஞ்ஜய சில்வாவும் 108 ஓட்டங்களை பெற்றிருந்தார். 7வது விக்கெட்டுக்கு காமிந்து மெண்டிஸ்- தனஞ்ஜய சில்வா இணை 173 ஓட்டங்களை பெற்றனர். 8வது விக்கெட்டுக்கு காமிந்து மெண்டிஸ்- பிரபாத் ஜயசூரிய இணை 67 ஓட்டங்களை பெற்றனர். 10வது விக்கெட்டுக்கு காமிந்து மெண்டிஸ்- கசுன் ராஜித இணை 52 ஓட்டங்களை பெற்றனர்.
டெஸ்ட் போட்டியொன்றில் இரண்டு இலங்கை வீரர்கள் இரண்டு இன்னங்ஸிலும் சதமடித்த முதலாவது நிகழ்வு இது. தவிரவும், ஏற்கெனவே 5 இலங்கை வீரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்துள்ளனர்.