யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனின் சடலம், இன்று (22) உடற் கூராய்வு பரிசோதனைக்குள்ளாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (21) காலை 5.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும், நண்பனும் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில்- பருத்தித்துறை திசையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, சிறுப்பிட்டிக்கு அண்மையாக நாய் குறுக்கே சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்தார். கூட பயணித்த நண்பனும் சிறிய காயமடைந்தார். அவர் உடனடியாக, அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தார். நோயாளர் காவு வண்டியின் மூலம், மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் நண்பன் உயிரிழந்ததை அறியாத மற்றைய நண்பன்- அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கருதி- விபத்து தொடர்பான பொலிஸ் விசாரணையை தவிர்க்கும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றிருக்கலாமென கருதப்படுகிறது- மானிப்பாயிலுள்ள தனது வீட்டில் விட்டுவிட்டு, வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
உயிரிழந்த மாணவன் எதற்காக பருத்தித்துறை திசையில் பயணித்தார் என்பது தனக்கு தெரியவில்லையென, மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவனின் வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்படவுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.