இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளராக திருகோணமலையை சேர்ந்த ச.குகதாசன் தெரிவு செய்யப்படவுள்ளார். செயலாளர் பதவியை முதலாவது வருடத்தில் குகதாசன் பதவிவகிப்பதற்கு ஞா.சிறிநேசன் விட்டு கொடுக்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, தலைமை பதவிக்க தெரிவான பின்னர் சி.சிறிதரனின் நடவடிக்கைகளினால் அவரது தீவிர ஆதரவாளர்கள் கடுமையான அதிருப்தியடைந்துள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் பதவி உள்ளிட்ட பதவிகள் தெரிவில் ஏற்பட்ட குழப்பத்தினால் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சிறிதரன் அணியினர் சிறிநேசனையும், சுமந்திரன் அணியினர் குகதாசனையும் முன்னிறுத்தி செயலாளர் தெரிவில் மல்லுக்கட்டினர்.
இதற்கு முன்னதாக, கட்சியின் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தலைமை பதவிக்கான போட்டியில் இரண்டு அணிகளும் பெரும் பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டன. அதற்கு முன்னதாக கட்சியில் சுமந்திரன் அணியென்ற ஒரு பிரிவு உருவாக, சிறிதரன் அணியும் உருவாகியிருந்தது. இந்த மோதல் பின்னணியில் ஒரு கட்சிக்குள்ளேயே இரு எதிர்க்கட்சிகள் பாணியில் இரு அணிகளும் செயற்பட்டன.
செயலாளர் சர்ச்சையையடுத்து, சமரசம் ஏற்படுத்தும் கூட்டம் அண்மையில் கிளிநொச்சியில் நடந்தது. குகதாசனும், சிறிநேசனும் ஒவ்வொரு வருடமாக செயலாளர் பதவியை வகிக்க ஒப்புக் கொண்டனர். என்றாலும், முதல் வருடத்தில் செயலாளர் பதவியை தான் வகிக்காமல் விட்டால், தனக்கு பதவியே தேவையில்லையென குகதாசன் தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, சிறிநேசனை விட்டுக்கொடுக்குமாறு சிறிதரன் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட சிறிநேசன், முதல் வருடம் பொதுச்செயலாளராக குகதாசன் செயற்பட சம்மதம் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியாவில் நடந்த சமரச கூட்டத்தில், சிறிதரன் தரப்புக்கு பல உத்தரவாதங்களையும் வழங்கியிருந்தார். பதவியேற்ற பின் சுமந்திரனின் பேச்சின்படி தான் நடப்பேன் என சந்தேகம் கொள்ள வேண்டாம், தலைவரின் சொற்படியே நடப்பேன், தான் செயற்பட தொடங்கிய பின் அதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என உறுதியளித்தார்.
இதேவேளை, செயலாளர் விவகாரத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியம் என தம்மை உசுப்பேற்றி விட்டு, இப்பொழுது சுமந்திரன் தரப்பை சமாளிக்கும் விதமாக சிறிதரன் நடந்து கொள்வதாக பரவலாக ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
குறிப்பாக, சிறிதரனின் வெற்றியில் மட்டக்களப்பு பிரமுகர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அவருக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களே அதிகளவில் வாக்களித்தனர். செயலாளர் தெரிவில் கிழக்கை சேர்ந்த தமது விருப்பம் கவனத்தில் கொள்ளப்படவில்லையென அவர்கள் பரவலாக அதிருப்தி வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் தம்முடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சிறிதரன் தற்போது தொடர்பை நிறுத்தி விட்டதாகவும், அவருடன் தொடர்பு கொள்ளக்கூட முடிவதில்லையென்றும் குறிப்பிடுகிறார்கள்.
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள மத்தியகுழு உறுப்பினர்களில் கணிசமானவர்கள் சுமந்திரன் தரப்பின் தெரிவே, தற்போது மத்தியகுழுவில் சுமந்திரன் தரப்பை எதிர்த்து சிறிதரனாலும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது. இப்படியான நிலைமையை ஏற்படுத்துவதெனில், ஏன் தமிழ் தேசியத்தின் பெயரால் அவர் எம்மை உசுப்பேற்றி தேர்தலில் போட்டியிட்டார் என பரவலாக அதிருப்தி எழுந்துள்ளது.




