இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் போட்டியில் சி.சிறிதரன் வெற்றியடைந்து விட்டார். தலைமை போட்டியில் யார் வெற்றியடைவார் என்ற ஊடக, வெகுஜன, கட்சி வட்டார கணிப்புக்கள் பெரும்பாலானவற்றிற்கு மாற்றாக, கள நிலவரம் அமைந்தது.
தேர்தலில் சிறிதரன் வெற்றியடைந்து விட்டார் என்ற செய்தியை விட, சுமந்திரன் தோல்வியடைந்து விட்டாரா என்று கேட்டே கட்சிக்குள், சமூக ஊடகங்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். அந்தளவுக்கு கட்சிக்குள்ளும், சமூக ஊடகங்களிலும் சுமந்திரன் செல்வாக்கு செலுத்தியிருந்தார்.
ஆனால், அந்த செல்வாக்கு வாக்காக மாறவில்லை.
மாறாக, தான் கிளிநொச்சிக்கு மட்டும் ஜமீன்தார் அல்லவென்பதை சிறிதரன் நிரூபித்துள்ளார். சிறிதரனின் இந்த வெற்றிக்கு அவர் தரப்பின் “விடா முயற்சி விஸ்பரூப வெற்றி“யென்ற தீவிர முயற்சிகள் முக்கிய காரணங்கள் என்றாலும், சுமந்திரன் தரப்பின் பெரும் பலவீனங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
தலைவர் தெரிவுக்கு முன்னதாக, “எங்கள் சேருக்கு 3 மொழிகளும் அத்துப்படி. எங்கள் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும், சிங்களவர்களுக்கும் சொல்வார். அவரை விட்டால் இனி தமிழர் பிரச்சினையை தீர்க்க ஆளே கிடையாது“ என சுமந்திரன் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் சிரிப்பு மூட்டிக் கொண்டிருக்க…. “வேட்டி கட்டிய போராளி எங்கள் ஐயாவுக்கு ஆங்கிலமும், சிங்களமும் தெரியாதே தவிர, என தேவையான மற்ற ‘லாங்குவேஜ்’ எல்லாம் தெரியும். அப்படியானவர்கள்தான் எல்லோரையும் கட்டுப்படுத்தி, கட்சியை வளர்க்கலாம். அப்படியானவர் எங்கள் ஐயா“ என சிறிதரன் ஆதரவாளர்கள் ஒருபக்கம் அக்கப்போர் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பிரச்சாரப் போர்கள்… அக்கப்போர்களிற்கு மத்தியில் கட்சி தலைமை போட்டியில் சிறிதரன் ஏன் வெற்றியடைந்தார், சுமந்திரன் ஏன் தோல்வியடைந்தார் என்பதற்கான காரணங்கள் பற்றிய விரிவான அலசல் இது.
எதையும் பிளான் பண்ணி செய்ய வேண்டும்!
எம்.ஏ.சுமந்திரன் என்றாலே ஒரு தரப்பினர் துதி பாடவும், இன்னொரு தரப்பினர் அசூசையாக பார்க்கவும் கூடிய ஒரு பின்னணியையே சுமந்திரன் உருவாக்கியுள்ளார். சுமந்திரன் இப்பொழுது மாவீரர்தின நிகழ்வுகளுக்கு சென்று, “நானும் ரௌடிதான்“ என நிறுவ முயன்றாலும், அவரது “கிஸ்ரி அப்படி“யென ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள்.
எதையும் துணிந்து பேசுகிறார், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுகிறார், வாக்குக்காக ஒளித்து மறைத்து பேசவில்லையென்பதை சுமந்திரனின் தகுதிகளில் ஒன்றாக, அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம். வாக்குக்காக எதையும் ஒளிந்து மறைத்து பேசவில்லையென்ற ஒரு வார்தையையும் சேர்த்துத்தான் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை ஒரு தகுதியாக சுமந்திரன் தரப்பு முன்வைக்கிறது. தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையானவர்களின் விருப்பங்கள், கருத்துக்களுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்து, அதை ஒரு தகுதியாக முன்னிறுத்துவது தர்க்க முரணானது.
சுமந்திரன் கட்சிக்குள் நடக்கும் வாக்கெடுப்புக்களின் போது, இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதுவும், பிரபாகரன் பாணியில் புகைப்படம் எடுத்து, அன்னை பூபதி தொடக்கம் அங்கயற்கன்னி வரை ஒருவரையும் மிச்சம் விடாமல் அஞ்சலி செலுத்தி புகைப்படம் போட்டு, திலீபன் ஆட்டுக்குடல் பொருத்தியிருந்தார், புலிகளின் கட்டுமானங்களை பார்த்து கிளிநொச்சியில் கட்சியை கட்டமைத்துள்ளேன் என அடித்து விடக்கூடிய ஒரு வேட்பாளரை எதிர்கொள்வது சுலபமல்ல.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் அரசு கட்சி தமிழ் தேசிய பரப்பிலிருந்து விலகி, தென்னிலங்கை மைய கட்சியாகிறது என்பதை போன்ற அபிப்பிராயம் தமிழ் பரப்பில் அதிகரித்து வருகிறது. தமிழ் அரசு கட்சியின் நகர்வுகளால் தீவிரம் பெற்ற இந்த உணர்வு ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தின் மீதான பார்வையாகவும் அமைந்துள்ளது. சுமந்திரனின் இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களை மணமுடித்தார்கள், சாணக்கியன் சிங்கள பெண்ணை திருமணம் முடிக்கிறார் என்பதை போன்ற செய்திகள் வெளியாகி தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பெரும்பாலானவர்கள் மீது டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை போன்ற பிம்பமே உருவாகி வருகிறது. டக்ளஸ் தேவானந்தாவை அல்லது தென்பகுதி கட்சி பிரமுகர்களை ஒரு தொகுதி மக்கள் ஏன் ஆதரிக்கிறார்களோ, அதேபோலவே தமிழ் கட்சிகளின் பிரமுகர்களையும் பார்க்கிறார்கள்.
இந்த நிலைமைக்குள், தமிழ் அரசு கட்சி தலைவர் தெரிவு நடந்திருந்தால் சுமந்திரன் வெற்றியடைந்திருப்பார். ஆனால், இந்த போட்டிக்குள் தமிழ் தேசியம் என்ற ஐயிற்றத்தை சிறிதரன் தரப்பு எப்பொழுது மிக்ஸ் பண்ணியதோ, அப்பொழுதே சுமந்திரன் காலியாகி விட்டார்.
இந்த போட்டிக்குள் தமிழ் தேசியத்தை சரியான விகிதத்தில் சிறிதரன் தரப்பு மிக்ஸ் பண்ணிய போது, அதை எதிர்கொள்ள சுமந்திரன் தரப்பால் இயலவில்லை. கடந்த வருடம் மாவீரர்தினத்துக்கு போனார், பண்டிதர் வீட்டுக்கு போனார் என்பதெல்லாம் எடுபடவில்லை. அவரது “கிஸ்ரி அப்படி“ என்றே பலரும் நினைத்தனர்.
கடந்த வருடம் மாவீரர்தினத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஒன்றுக்கு சுமந்திரன் சென்றிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளின் பின்னணியில் மாவீரர் பெற்றோரின் மத்தியில் சுமந்திரன் நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அவர் அன்று நிகழ்வில் விளக்கேற்றவில்லை, புகைப்படம் வெளியாவதை மட்டும் கவனித்துக் கொண்டனர் என அப்பொழுது சொல்லப்பட்டது. சுமந்திரன் இப்படியான போட்டிகளில் தேசிய பிரமாஸ்திரத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில், ஜோதியில் இன்னும் ஐக்கியமாக வேண்டும்!
மங்குனி அமைச்சர்கள்!
சுமந்திரனின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று- களத்தை சரியாக மதிப்பிடாதது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இந்த பலவீனத்தை சுமந்திரன் சரிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர் தவறிழைத்தார்.
ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக இந்த கட்டுரையாளரும் சுமந்திரனும் சந்தித்த போது, கள நிலவரம் பற்றி சுமந்திரன் கேட்டிருந்தார். இன்று யாழ் மாவட்டத்தில் எந்த அடிப்படையில் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உள்ளதோ, அதை அப்பொழுது குறிப்பிட்டிருந்தார். கூடவே, சுமந்திரனின் ஆஸ்தான பிரதேசங்களான கரவெட்டி, பருத்தித்துறை, உடுப்பிட்டி பகுதிகளில் அங்கஜன் அலை வீசுமென்பதையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் சறுக்கலையும் சந்திக்குமென்று குறிப்பிட்டிருந்தார்.
சுமந்திரன் ஒரு புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த இடத்தில், சுமந்திரன் அணியின் வலதோ, இடதோ கையான ஒருவரும் இருந்தார். அவர் உனடியாக மறுத்து, “சேர் அப்படியில்லை நிலைமை. பருத்தித்துறை தொகுதியில் 21,000 வாக்குகள் உள்ளன. அதில் 17,000 வாக்குகளை சொல்லியடிக்கிறோம்“ என நீளமாக பேசினார். சுமந்திரன் ஒரு மகிழ்ச்சிப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
சுமந்திரன் அணி எதிர்பார்த்ததற்கு மாறாக முடிவுகள் அமைந்தன. சுமந்திரனின் பகுதிகளான பருத்தித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டியில் தமிழ் அரசு- தமிழ் தேசிய கூட்டமைப்ப பெரும் அடியை சந்தித்தது.
இந்த தலைவர் போட்டிக்கு முன்னதாக, சுமந்திரன் அணியின் தூண் ஒருவர் ஒரு விடயத்தை சொன்னார். “இம்முறை சேருக்கு வெற்றி உறுதி. அதில் மாற்றுக்கருத்தில்லை. எல்லா இடமும் செற் செய்து விட்டோம். மிஞ்சிப் போனால் ஒரு 50 வாக்குகள் சிறிதரனுக்கு செல்லலாம்“ என. இதுதான் சுமந்திரனுக்கும் சொல்லப்பட்டிருந்த கள நிலவரம்.
அவர்கள் அவ்வப்போது சுமந்திரனை குளிர்விக்கும் தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, களத்தை கச்சிதமாக கணக்கிடவில்லை. மாறாக சிறிதரனிடம் கச்சிதமான அணியிருந்தது.
தீயாய் வேலை செய்த குமார்கள்!
சுமந்திரனிடம் பலவீனமான அணியிருந்தது. பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் சுமந்திரன் பலமாக இருந்தாலும், களத்தில் அவ்வாறில்லை. மாறாக சிறிதரன் அணி தீயாக வேலை செய்யும் அணியாக இருந்தது. இம்முறை தலைமை பதவிக்கு போட்டியிடுவதென்பதில் இரண்டு போட்டியாளர்களும் மிக நீண்டகாலத்துக்கு முன்னரே திட்டமிட்ட காய்நகர்த்தி வந்தவர்கள்.
தமிழ் அரசு கட்சியின் கடந்த மாநாடு 2019ஆம் ஆண்டு நடைபெறுவதற்கு முன்னதாக, இதே போட்டியாளர்கள் அப்பொழுதும் போட்டியிடுவார்களா என்ற ஊடகப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த கட்டுரையாளருடன் அப்பொழுது பேசிக்கொண்டிருந்த சிறிதரன், “தலைவர் தெரிவுக்கு இப்பொழுது போட்டியிடுவேன் என நினைக்கிறீர்களா?“ என கேட்டிருந்தார். “இல்லை. இம்முறை போட்டியிட மாட்டீர்கள். ஆனால் அடுத்த முறை எந்த காரணத்தை கொண்டும் பின்வாங்க மாட்டீர்கள்“ என குறிப்பிட்ட போது, “மிகச்சரியாக கணித்துள்ளீர்கள்“ என்றார் சிறிதரன்.
ஆனால், தலைமை பந்தயத்தில் சிறிதரன் மரதன் பாணியில் ஓடினார். சுமந்திரன் 100 மீற்றர் பாணியில் ஓடிக்கொண்டிருந்தார். இதனால் இந்த பந்தயத்தில் சுமந்திரன் அதிக பரபரப்பாக இருந்தார்.
கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களான பிரதேச கிளை தெரிவில் தனது ஆட்கள் இடம்பெறுவதில் சுமந்திரன் அதிக அக்கறை காண்பித்தார். இதனால் விதிகளுக்கு முரணான கிளைக்குழுக்கள் தெரிவு செய்யப்படும் சர்ச்சைகள் கிளம்பியது. ஒப்பீட்டளவில் விதி மீறலான கிளைக்குழுக்களை சுமந்திரன் அணியே தெரிவு செய்தது. (கட்சியின் தற்போதைய நிலைமைக்கு எதிராக சுமந்திரன் தரப்பு நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு, இதனாலேயே குறைவாக உள்ளது). அதாவது- எல்லோருக்கும் விளங்கும் தமிழில் சொல்வதென்றால்- ஓட்டுமாட்டு வேலை செய்து தேர்தலில் வெற்றிபெறும் ஐடியாவை செயற்படுத்தினார்கள். இந்த ஐடியாவை செயற்படுத்தியிருக்கா விட்டால் தேர்தலில் சுமந்திரன் இன்னும் பெரிய சரிவை சந்தித்திருப்பார்.
தனக்கு சார்பாக ஆட்களை உடைத்து எடுப்பது, அவர்களை கொண்டு, தனக்கு சார்பான தொகுதிக்கிளைகளை உருவாக்குவது என ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியமைக்க சுமந்திரன் முயன்றார். உருவியெடுக்கப்படுபவர்கள் என்றால் யார்- ஏதோவொரு காரணத்துக்காக அல்லது சலுகைக்காக அணி மாறுபவர்கள். அவர்கள் தாம் ஒட்டியிருக்கும் இடத்தில் நல்ல பிள்ளை ரிசல்ட் வாங்க என்ன செய்வார்கள்?. தலைவரின் மனம் குளிரும் களரிப்போர்ட் வழங்குவார்கள். இதுவும் சுமந்திரன் சறுக்கிய இடம்.
மாறாக, சிறிதரன் அணியில் இருப்பவர்கள் கொள்கைக்குன்றுகள் அல்ல. அவர்களும் இவர்களின் அண்ணன் தம்பிகள்தான். ஆனால் உள்ளாடை அணிந்தாலும், தமிழ் தேசிய உள்ளாடைதான் அணிவேன் என்ற நிலைப்பாட்டிலிலுள்ள ஒரு களத்தில், அதற்கு மாறாக விளையாடுவேன் என களம்புகும் ஒருவர் உண்மையில் அந்த நிலைப்பாட்டில் ஆத்மார்த்த உறுதியுள்ளவர்களுடன் களம்புகுந்தால் மட்டுமே வெற்றியடைவார். அப்படியானவர்கள்தான் ஆத்மார்த்தமாக பணிபுரிவார்கள்.
காதால் இரத்தம் வரும்வரை பேச்சு
சுமந்திரன் அணியின் செயற்பாட்டு பலவீனத்தை சுட்டிக்காட்ட மற்றொரு சம்பவம். முன்னாள் எம்.பி சரவணபவன் இந்த களத்தில் யாரையும் தீவிரமாக ஆதரிக்கவில்லை. அவரது தொகுதியில் 10 பொதுக்குழு வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சுமந்திரன் ஆதரவாளர். அவர் பேசி, 4 பேரளவில் சுமந்திரன் வாக்காளர்களாக மாற்றினார். எஞ்சியவர்கள் சிறிதரன் தரப்பு. சரி, இருவருக்கும் பாதி பாதியாக தனது ஆட்கள் வாக்களிக்கட்டும் என சரவணபவன் செற் பண்ணி விட்டு, வாக்களிப்புக்கு முதல்நாள் மாலை சென்றுள்ளார். வாக்களிப்புக்கு முதல்நாள் இரவு சிறிதரன் தரப்பு அவர்களின் வீடுகளுக்கு சென்று, நீண்டநேரம் பேசியது. நள்ளிரவு கடந்தும் பேசினார்கள்.
மறுநாள் சரவணபவன் தரப்பில் ஒருவர்தான் சுமந்திரனுக்கு வாக்களித்தார். எஞ்சிய 9 வாக்கும் சிறிதரனுக்கே.
சுமந்திரன் அணியில் பொதுச்செயலாளர் பந்தயத்தில் இருப்பவர் குகதாசன். அவர் தனது ஆட்களுக்கு சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டுமென வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஆனால் திருகோணமலையில் சிறிதரனையே கணிசமானவர்கள் ஆதரித்தனர். வாக்களிப்புக்கு முதல்நாள் இரவு தொடங்கி விடியும் வரை சிறிதரன் தரப்பினர் அவர்கள் ஒவ்வொருவருடனும் தொலைபேசியில் பேசினர்.
இந்த ஒப்ரேசனில் மட்டக்களப்பு, அம்பாறை பிரமுகர்களின் பங்கு மிகப்பெரியது.
சுமந்திரனின் பிரச்சாரங்கள் கிட்டத்தட்ட முடிந்த பின்னரே சிறிதரனின் பிரச்சாரமே ஆரம்பித்தது. இதில் மட்டக்களப்பு பிரமுகர்களின் பங்கும் முக்கியமானது. மட்டக்களப்பு முன்னாள் எம்.பிக்கள் சீ.யோகேஸ்வரன், சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோர் சிறிதரனுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். களநிலவரத்தில் கணிசமான மாற்றத்தை உண்டாக்கிய சம்பவம் இது.
கிட்டத்தட்ட கிழக்கிள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருடனும் அவர்கள் பேசியுள்ளனர்.
கிழக்கில் அவர்கள் சிறிதரனை தீவிரமாக ஆதரிக்க வேண்டிய நிலைமையேற்பட்டதும், சுமந்திரனின் அணுகுமுறை தவறினாலேயே.
கைகொடுக்காத சாணக்கியன் பெயர்
சாணக்கியன் தனது பெரும் பலம் என சுமந்திரன் நினைத்திருந்தார். அதனால், கிழக்கில் மற்றைய பிரபலங்களை விட சாணக்கியனையே நம்பியிருந்தார். சாணக்கியன் முதிர்ச்சியற்றவர். அதனால் மட்டக்களப்பு கிளையில் வலுவான பிளவு உள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்களின் முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. அனேகர் அறிந்திராத சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறோம். மட்டக்களப்பு மாவட் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மூத்த உறுப்பினர்களை சீண்டும் விதமாக சாணக்கியன் கிரந்த கதை பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூத்த உறுப்பினர் ஒருவர் “பொத்தடா வாயை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிள்ளையான், கிஸ்புல்லாவுடன் படுத்திருந்து விட்டு எமக்கு அரசியல் படிப்பிக்கிறாயா?“ என பகிரங்கமாக திட்டிவிட்டார்.
இதன்பின்னர், தமிழ் அரசு கட்சியல்லாத பிரமுகர் ஒருவருடன் சாணக்கியன் பேசிக் கொண்டிருந்த போது, சுமந்திரன் வெற்றிபெற்று தலைவரானதும் மட்டக்களப்பிலுள்ள மூத்த உறுப்பினர்களை கலைத்து விடுவேன் என அவரிடம் சொன்னதாக ஒரு பேச்சிருந்தது. அது மட்டக்களப்பு மூத்த பிரமுகர்களின் காதிற்கு செல்ல… அவர்களை சீண்டும் பேச்சானது. சாணக்கியனா… நாங்களா… ஒரு கை பார்ப்போம் என அவர்கள் களமிறங்கினார்கள். முடிவு- சாணக்கியன் மண் கவ்வினார்.
சாணக்கியனையே நம்பியிருந்த சுமந்திரன் கிழக்கில் மற்றையவர்களை கண்டுகொள்ளவில்லையென சொல்லியிருந்தோம் அல்லவா- பிரச்சார நடவடிக்கைக்கு முதலில் கிழக்கிற்கு சென்றவர் சுமந்திரன். அப்போது, ஏனைய மூத்த பிரமுனர்களை தொடர்பு கொள்ளவில்லை. சிறிதரன் கிழக்குக்கு சென்று திரும்பிய பின்னர், சுமந்திரன் மீண்டும் கிழக்குக்கு சென்றார். அப்போது மூத்த பிரமுகர்கள் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிறிநேசனை தொடர்பு கொள்ள 6 முறை தொலைபேசியில் அழைத்தார். சிறிநேசன் அழைப்பை ஏற்கவில்லை.
கிழக்கில் சாணக்கியன்… ஏனைய மூத்த பிரமுகர்களுக்கிடையில் சமனிலையை பேணியிருந்தால் சுமந்திரன் கிழக்கில் சறுக்கியிருக்க மாட்டார்.
சிறிதரன் கிழக்குக்கு சென்று வந்த பின்னர் கள நிலவரம் மாறிவிட்டது என்பதை அறிந்த சுமந்திரன், மீண்டும் கிழக்குக்கு சென்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இவையெல்லாம் சுமந்திரன் சறுக்கிய இடங்கள். இத்தனை பலவீனமிருந்தால் வேறு யாரென்றாலும் அரசியலில் எழுந்து நிற்கவே முடியாது. ஆனால் களத்தில் இன்னும் துடுப்புடன் சுமந்திரன் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம்- அவர் ஒருவர் மீதான கவர்ச்சியே. இப்பொழுது சுமந்திரன் அணியிலுள்ள பெரும்பாலானவர்கள் சுமந்திரனின் கவர்ச்சியில் பலனடைபவர்களே. தானும் பலனடைய கூடிய கவர்ச்சியானவர்களை கண்டறிவதே சுமந்திரனின் அரசியலுக்கு தேவையான ஒட்சிசன்.