பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள சில ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் இதுவரை 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர், மாற்றுக் கொள்கைக்கான மையம், சோசலிச வாலிபர் சங்கம், முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் சிலரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்டமூலத்தில் உள்ள விதிகள், நியாயமான காரணமின்றி எந்தவொரு நபரையும் கைது செய்து காவலில் வைக்க இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படைக்கு அதிகாரம் அளித்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் தனிமனித சுதந்திரம், அரசியல் சாசனம் வழங்கிய கருத்து சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கெடுப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை அவர்கள் கோருகின்றனர்.