இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் கைச்சாத்திட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனைச் செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச IMF அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்துள்ளார். .
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவை சந்தித்த போதே சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார். குழுவில் மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூயர், IMF வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜவான் மற்றும் உள்ளூர் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் அடங்குவர்.
“இலங்கை அரசாங்கம் சுமத்தியுள்ள பாரிய வரிச்சுமையினால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தந்த சர்வதேச நாணய நிதியக் குழுவிடம் தெரிவித்தார். எனவே, EFF உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அத்தகைய திருத்தத்திற்கு செல்லும்“ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர்களுடன் IMF குழு நடத்திய சந்திப்பு பற்றி குறிப்பிட்ட மரிக்கார், இந்த சந்திப்பு குறித்து ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே, இந்த சந்திப்பின் போது திஸாநாயக்க ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதையும் மற்றைய NPP தலைவர்கள் IMF குழுவுடன் நடத்திய கலந்துரையாடல்கள் பற்றிய விவரங்களையும் இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று மரிக்கார் கூறினார்.




