315 வாக்காளர்கள்… தலைவர் தெரிவில் வெற்றி பெறப்போவது யார்?: கள நிலவரம் என்ன?

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவு நாளை (21) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. தலைவர் தெரிவையொட்டி தமிழ் அரசு கட்சி இரண்டுபட்டுப் போயுள்ளது. கிட்டத்தட்ட அடிதடியில் முடியாத குறையாக மோதல் நடந்து வருகிறது.

தலைவர் தெரிவை தொடர்ந்து, செயலாளர் பதவிக்கான போட்டியும் சூடு பிடித்துள்ளது.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. காலை 11 மணியளவில் புதிய தலைவர் யார் என்பது தெரிய வந்து விடும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 315 பொதுக்குழு உறுப்பினர்கள் தலைவர் தெரிவுக்காக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பிரதேச கிளைகள் ஊடாக தலா 5 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் தெரிவு செய்யப்படாத கட்சியின் சிரேஸ்ட, முக்கிய உறுப்பினர்களும் மாவட்ட பட்டியலில் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 315 பேரும் நாளை அடையாள அட்டையுடன் பொதுக்குழு மண்டபத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் பொதுசசெயலாளர் பா.சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, தலைவர் மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொள்ளாமல் உள்ளார். இதேவேளை, கட்சிக்குள் மாவை – சிறிதரன் தரப்பின் பிடியை இல்லாமல் செய்ய, சுமந்திரன் தரப்பின் திட்டப்படி சத்தியலிங்கம் செயற்படுகிறாரா என்ற சந்தேகமும் கட்சியின் ஒரு தரப்பிடம் உள்ளது.

சத்தியலிங்கம் பேச, கையொப்பம் இட முடியாத நிலைமையில் இருக்கிறார் என சொல்லப்பட்ட போதும், அவரது மின்னஞ்சலில் இருந்து ஓரிரு நாட்களின் முன்னர் தலைவர் மாவை சேனதிராசா, வேட்பாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 20ஆம் திகதி நடக்கவிருந்த மத்தியகுழு கூட்டம் இரத்து செய்யப்படுவதாகவும், 21ஆம் திகதி தன்னால் முன்னிலையாக முடியாததால், குழுவொன்றை அமைத்து, அவர்கள் மூலம் தேர்தலை நடத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த குழுவில் யார் யார் அங்கம் வகிக்கலாம் என்பதையும் சத்தியலிங்கமே அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கனகசபாபதி, முல்லைத்தீவில் சாந்தி சிறிஸ்கந்தராசா, கிளிநொச்சியில் குருகுலராஜா, மன்னாரில் பரஞ்சோதி, அம்பாறையில் கோடீஸ்வரன் உள்ளடங்களாக 8 மாவட்டங்களிலிருந்தும் தலா ஒவ்வொருவர் வீதம் பிரதிநிதிகளை நியமிக்க யோசனை தெரிவித்துள்ளார்.

சத்தியலிங்கம் பேச முடியாத, கையொப்பம் இட முடியத நிலையில் இருந்தால், அவர் யாருக்கு சொல்லி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது? அவர் மின்னஞ்சலுக்காக யாரோ ஒருவருடன் பேசினால், ஏன் தலைவருடன் பேச முடியவில்லையென கட்சிக்குள் ஒரு தரப்பு சந்தேகம் எழுப்புகிறது.

மருத்துவ காரணங்களுக்காக ஓய்வில் இருக்கும் ஒருவர் பற்றி விமர்சிப்பது பொருத்தமற்றது என்ற உணர்வை கடந்து, தலைவர் பதவி போட்டி தீவிரம் பெற்றுள்ளதால் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டாலும், நளை இறுதியாக சிறிதரன்- சுமந்திரன் ஆகியோரே போட்டியிடுவார்கள்.

சிறிதரன் இறுதிநேரத்தில் மனம்மாறி போட்டியிலிருந்து விலகினால் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஒருவர் போட்டியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தலைமை பதவிக்கு கிழக்கிலிருந்து ஒருவரும் போட்டியிடவில்லையென்ற பிள்ளையான் அணியின் விமர்சனத்தை இல்லாமலாக்கவுமே சீ.யோகேஸ்வரன் போட்டியிடுகிறார்.

சிறிதரன்- சுமந்திரனுக்கு இடையிலான போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிப்பது சிரமம். இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் இதுவரை போட்டி நடக்காததாலும், அண்மைய வருடங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் இயங்காமல்- பிரமுகர்தனத்தை விரும்புபவர்கள் அதிகளவில் வாக்களிக்க தகுதி பெற்றதும் வாக்கெடுப்பு முடிவை கணிப்பதை சிரமமாக்கியுள்ளது.

தலைவர் பதவி வாக்கெடுப்பை குறிவைத்து எம்.ஏ.சுமந்திரன் நீண்டகாலமாக செயற்பட்டுள்ளார். கட்சியின் புதிய கிளை தெரிவுகளில் தனது ஆதரவாளர்கள் கணிசமாக இடம்பிடிப்பதை கவனித்துக் கொண்டார். இதனால்தான், கிளை தெரிவில் சர்ச்சைகள் தோன்றியுள்ளது. திருகோணமலையில குகதாசன், சுமந்திரனின் அணியை சேர்ந்தவர். அவர், நிவாரணம் வழங்குவதாக அழைத்து, புதிய உறுப்பினர்களை இணைத்து, அவர்களின் அங்கத்துவ பணத்தை தானே செலுத்தியதாக சர்ச்சை தோன்றியது.

இதை தொடர்ந்து, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் 6 பேர் பட்டியலில் வாக்களிக்க இணைக்கப்பட்டுள்ளனர்.

பா.சத்தியலிங்கமும், சுமந்திரன் அணிக்கு நெருக்கமானவர்தான். ஆனால் பதில் பொதுச்செயலாளர் என்பதால் பகிரங்கமாக ஆதரவளிக்கவில்லை. வவுனியா தெரிவிலும் சர்ச்சைகள் தோன்றியது. இரண்டு மாவட்டங்களிலும் பிரதேச கிளைகள் மூலம் வாக்களிக்க வருபவர்களில் கணிசமானவர்கள் சுமந்திரனையே ஆதரவளிப்பார்கள்.

மன்னாரில் பெரும்பாலானவர்கள் சிறிதரனை ஆதரவளிப்பார்கள். கிளிநொச்சி கிறிதரனின் கோட்டை. முல்லைத்தீவில் ரவிகரன், சாந்தி சிறிஸ்கந்தராசா போன்றவர்களின் தேசியத் தலைவர் சுமந்திரன். முல்லைத்தீவில் கணிசமான வாக்கு சுமந்திரனை சேரும். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிவமோகன்- சுமந்திரன் மோதல் விஸ்பரூபமெடுத்திருந்தது. சிவமோகன் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் நடந்த மத்தியகுழு கூட்டமொன்றில்- சிவமோகன் வேண்டுமென்றே வேட்புமனுவை நிராகரிக்கும் விதமாக தாக்கல் செய்தார் என்பது அங்குள்ள வீடியோ பதிவில் உறுதியாகியதாக சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்பொழுது அனைவரும் ஐக்கியம்.

யாழ்ப்பாணத்தில் நிலவரம் தெளிவில்லாமல் உள்ளது. கரவெட்டி, பருத்தித்துறை கிளைகள் சுமந்திரனை ஆதரிக்கும். கோப்பாய் இரு பகுதிகளாக பிளவுபடும். நல்லூரில் சீ.வீ.கே.சிவஞானம் இப்பொழுது சுமந்திரன் அணியுடன் ஐக்கியமாகி விட்டார். வலி தென்மேற்கில் சரவணபவன் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், அவரிடமுள்ள 10 வாக்காளர்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனர். ஒருமுறை சரவணவன் கிளிநொச்சியில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சரவணபவனின் உதவியாளர் ஒருவர் அழைப்பிதழுடன் சிறிதரனை சந்தித்து, அதை கொடுத்துள்ளார். சிறிதரன் அந்த அழைப்பிதழை வாங்கி, கிழித்து உதவியாளரின் முகத்தில் எறிந்துள்ளார். அந்த உதவியாளர் யுத்தத்தில் காயமடைந்து, ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடும் முன்னாள் போராளி. அவரது முகத்திலேயே சிறிதரன் அழைப்பிதழை கிழித்தெறிந்தார். இதனால் சரவணபவன், இம்முறை சுமந்திரனையே ஆதரிக்ககூடும். ஆனால், அவரது தாயார் காலமாகியுள்ளதால், வாக்களிப்பில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஊர்காவற்றுறை வாக்காளர்களின் தேசியத் தலைவர் சிறிதரன்.

மட்டக்களப்பு, அம்பாறை நிலவரமே இப்போது சிக்கலாகியுள்ளது. முன்னர் இரண்டு மாவட்டங்களையும் சுமந்திரன் “செற்“ பண்ணியிருந்தார். ஆனால், சிறிதரன் கிழக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் நிலைமை சடுதியாக மாறியது.

“சிறிதரன் கிழக்குக்கு வந்து பல பொய்கள் சொன்னார். தான் 14 வயதிலேயே விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டதாக பல பொய்களை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் ஆனையிறவு சண்டை சமயத்தில் (1991) விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, பயிற்சி முகாமிலிருந்து ஓடிவந்தவர் என்பதுதான் அவரை தெரிந்தவர்கள் சொல்லும் தகவல். ஆனால் அதையெல்லாம் அவர் மறைத்து, தன்னை புலிகளின் பிரதிநிதியை போல பொய் சொல்லியுள்ளார். அதை கேட்டு, சிலர் மனம் மாறி விட்டனர். அவர்களை தனித்தனியாக சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தி வருகிறோம்“ என சுமந்திரன் தரப்பு பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

அம்பாறையில் முன்னாள் எம்.பி கோடீஸ்வரன், முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் உள்ளிட்டவர்கள் சிறிதரனை ஆதரிக்கிறார்கள். அந்த மாவட்டத்தின் தேசியப்பட்டியல் எம்.பி கலையரசன் கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ளார்.

தலைமை போட்டியின் பின் வில்லங்கம்

தமிழ் அரசு கட்சி தலைவர் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும், அதன் பின்னர் நீண்ட பனிப்போர் நிலவும். அதிலும் குறிப்பாக, சிறிதரன் வெற்றியடைந்தால், சுமந்திரன் இல்லாத பொல்லாத குடைச்சல்கள் எல்லாம் கொடுப்பார். தற்போது, மாவை சேனாதிராசாவுக்கு நிகழ்ந்தது சிறிதரனுக்கு நிகழும். அவர் அதை எவ்வாறு கையாள்வார் என்பது பெரிய கேள்வி.

தற்போதைய மாவையின் தலைமை மீதான விமர்சனம் என்பது, சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் எழுந்தவையே. சுமந்திரன் அடக்கி வாசித்திருந்தால், மாவையின் பலவீனங்கள் வெளிப்பட்டிருக்காது. மாவையின் பலவீனங்களை வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே சுமந்திரன் அவ்வாறு செயற்பட்டார்.

மறுவளமாக, சுமந்திரன் வெற்றியடைந்தால், அவ்வாறு குடைச்சல் கொடுக்கும் வல்லமை சிறிதரனிடம் கிடையாது. அவரை சுமந்திரன் சுலபமாக கையாள்வார்.

தலைமை போட்டியின் பின் கட்சி இரண்டாக உடையும், சிலர் விலகுவார்கள் என்றெல்லாம் வெளியாகும் ஊகங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால், கட்சி உறுப்பினர்களும், வாக்காளர்களும் சலித்து போகுமளவுக்கு உட்கட்சி மோதல் நீடிக்கலாம்.

செயலாளர் பந்தயம்

தலைவர் தெரிவின் பின்னர், 26 அல்லது 27ஆம் திகதியளவில் செயலாளர் யார் என்பது உறுதியாகிவிடும்.

போட்டியிடும் 2 தரப்புக்களுமே கைவசம் செயலாளர் பதவிக்கான ஆட்களை வைத்துள்ளனர். சுமந்திரன் தரப்பு திருகோணமலை குகதாசனையும், சிறிதரன் தரப்பு மட்டக்களப்பு சிறிநேசனையும் செயலாளராக்க முயற்சிக்கிறார்கள்.

தலைமை பதவியில் யார் வெற்றியடைகிறார்களோ, அவர்களின் ஆள் செயலாளராக வாய்ப்புள்ளது.

நேற்று (19) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசு கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில், செயலாளர் பதவிக்கு சிறிநேசனின் பெயரை, அரியநேத்திரன் முன்மொழிந்தார். உடனே பதறியடித்தபடி. சாணக்கிய ராகுல புத்திரன், இப்பொழுது அதற்கு ஏன் அவசரப்படுவான் என தட்டிக்கழிக்க முயன்றார்.

கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் தமது முன்மொழிவை அரியநேத்திரன் முன்மொழிந்தபோது, சாணக்கிய ராகுல புத்திரன் அவசரமாக ஓடிவந்து, அது அரியநேத்திரனின் தனிப்பட்ட கருத்து என்றார்.

சாணக்கிய ராகுல புத்திரனின் பதற்றத்திற்கு பின்னணி காரணமொன்றுண்டு.

அண்மையில் திருகோணமலையில் நடந்த கட்சி உறுப்பினர்களுடனான கூட்டமொன்றில் சுமந்திரன் பேசும்போது, கட்சியின் செயலாளராக குகதாசனையும், தேசிய அமைப்பாளராக சாணக்கியனையும் நியமிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியில் தேசிய அமைப்பாளருக்கான விதி இல்லையல்லவா என ஒருவர் கேட்ட போது, பொதுக்குழுவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றால் போதுமென்றார்.

தேசிய அமைப்பாளர் பதவிக்காக காத்திருக்கும் சாணக்கியன், செயலாளர் பதவியும் மட்டக்களப்புக்கு வந்தால், தனக்கு வில்லங்கமாகி விடும் என யோசிக்கிறார். செயலாளர், தேசிய அமைப்பாளர் பதவிகள் மட்டக்களப்புக்கு சென்றால், கிழக்கின் ஏனைய மாவட்டங்களின் பிரதிநிதிகள் குழப்பமடைவார்கள். தேசிய அமைப்பாளர் பதவியை தான் ஏற்பதெனில், செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வராமல் பார்க்க வேண்டிய தேவை சாணக்கியனுக்கு உண்டு.

விதிமீறலான தேர்தல்

நாளை தேர்தலிற்கு எதிராக யாரேனும் நீதிமன்றம் சென்றால், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தேர்தலுக்கு தடை பெறும் வாய்ப்புள்ளது. காரணம், இந்த தேர்தலில் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்ட கணிசமானவர்கள் புதியவர்கள். தமிழ் அரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் 2- 4 வருடங்கள் வரை கட்சி உறுப்பினராக செயற்பட்டவர்களே வாக்களிக்க தகுதி பெறலாம். ஆனால், வாக்களிக்கவுள்ள குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் இந்த தகுதியை எட்டாதவர்கள். குறிப்பாக, சுமந்திரன் அணியினால் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்களிலேயே அதிகமாக இந்தவகையினர் உள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், சாவகச்சேரி தொகுதி கிளைகள் உள்ளிட்டவற்றில் இந்த தகுதியை எட்டாதவர்கள் பலருள்ளனர். இந்த வகையானவர்கள் தமிழ் தேசிய அரசியல் பிடிப்பற்றவர்களாக, பிரமுகர் அரசியல் விருப்பமுள்ளவர்களாகவே உள்ளனர். இந்த போக்கே இன்று வளர்ச்சியடைந்து, தமிழ் அரசு கட்சி பதவிப் போட்டியில் சிக்கி சீரழிகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்