பெண் குரலில் பேசி, இளைஞர் ஒருவரை ஏமாற்றி பணம், கைத்தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் அண்மையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது.
திருகோணமலையை சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவர் தனது பேஸ்புக் காதலியை முதல்முறையாக நேரில் பார்ப்பதற்காக, யாழ்ப்பாணம் நெல்லியடிக்கு வந்துள்ளார்.
இரண்டு இளைஞர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்த 2 கையடக்க தொலைபேசிகள், பணம், தங்கச்சங்கிலி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றனர்.
இது தொடர்பில், திருகோணமலை இளைஞன் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.
அவருடன் பேசிய தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் உடுப்பிட்டியை சேர்ந்த 21 வயதான 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று (10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் நேற்று மீளவும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை தலா ரூ.10000 காசுப்பிணையிலும், தலா ரூ.100000 சரீரப்பிணையிலும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு இளைஞர்களும் பெண் குரலில் பேசினார்களா அல்லது இந்த மோசடியில் பெண்கள் யாராவது தொடர்புபட்டிருந்தனர என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.