தமிழ் அரசு கட்சியின் மாநாட்டை ஒத்திவைக்கும் எண்ணம் எவரிடமும் இல்லையென தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் யாழில் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கைத் தமிழர் கட்சியின் மாநாடு நான் அறிந்தவரையில் திட்டமிட்டபடி ஐனவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெறும்.
எனினும் அதில் மாற்றங்கள் அல்லது ஏதும் வித்தியாசமான விடயங்கள் நடைபெற இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் ஒரு கட்சியினுடைய மாநாடு அறிவிக்கப்பட்டு பொதுச் சபை உறுப்பினர் எல்லாம் அழைக்கப்பட்டு மாநாட்டுக்குரிய எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டிய ஒரு காரணம் நான் அறிந்த வரையில் இல்லை.
ஏனென்றால் பொறுப்புள்ள கட்சியென்றால் ஒரு மாநாட்டை நடாத்த தீர்மானித்து அதற்கு ஒரு திகதியை அறிவித்தால் அந்த திகதியில் மாநாடு நடக்கும். ஆகையினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மாநாடு நடக்க வேண்டும்.
எனினும் மாநாடு நடக்குமா என இந்த கேள்வி ஏன் இன்று எழுப்படுகிறது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுவதில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லை.
இதேவேளை இந்த மாநாட்டை ஒத்திவைக்கும் எண்ணம் ஏதும் கட்சிக்குள் இருக்கிறதா எனக் கேட்ட போது அவ்வாறு ஒத்தி வைக்கும் எங்கள் எவருக்கும் இல்லை என்றும் பதிலளித்தார்.
மேலும் எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்தி வைக்கும் எண்ணங்கள் இல்லை. கட்சியில் ஏனைய எவரிடமேனும் அப்படி ஒத்தி வைக்கிற எண்ணம் ஏதும் இருக்கிறதா என நீங்கள் தான் அறிய வேண்டும் என்றார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்த ச.குகதாசன், பணம் கொடுத்து திருகோணமலை மாவட்ட கிளைகளில் தனக்கு சார்பானவர்களை நியமித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, திருகோணமலை மாவட்ட கிளையை புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம் என, இரா.சம்பந்தன் தொடர்ந்து கட்சி தலைமையை வலியுறுத்தி வருகிறார். தனக்கு தெரியாமல் தேசிய மாநாடு தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஜனவரி 10ஆம் திகதி இரா.சம்பந்தனின் வீட்டில் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தை நடத்திய பின்னரே, தேசிய மாநாடு தொடர்பான இறுதி தீர்மானம் எடுப்பதென கட்சி தலைமை தீர்மானித்துள்ளது. இந்த பின்னணியில், எம்.ஏ.சுமந்திரனின் சார்பான பிரச்சார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள சாணக்கியன் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனின் நிலைப்பாட்டை இரா.சாணக்கியன் அறிந்துள்ள போதும், அதை பொருட்படுத்தத் தேவையில்லையென்ற பொருள்பட கருத்து தெரிவித்துள்ளார்.