ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நாளை மறுநாள் (30) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பிலிருந்த பிரிந்து செல்வதாக இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவெடுத்த பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் பெருமெடுப்பிலான பிரச்சாரத்துடனும், எதிர்பார்ப்புடனும் 5 கட்சிகள் கூட்டணியாக செயற்பட ஆரம்பித்தன.
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதன்பின்னர், காற்றுப்போன பலூனின் நிலைமைக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றது. அவ்வப்போது, கட்சிகள் கூடி பேசுவது, இடையிடையே பத்திரிகை அறிக்கைகள் என்ற அளவிற்கு அப்பால் அரசியலில் செயற்பட முடியாமல் திண்டாடி வருகிறது.
இந்த கூட்டணியிலுள்ள 5 கட்சிகளும் வடக்கு கிழக்கில் முழுமையான வலையமைப்பை கொண்டவையல்ல. புதிய கூட்டணி தொடங்கியதும், வடக்கு கிழக்கு முழுவதும் கிளைகளை அமைக்கப் போவதாக அறிவித்தாலும், அன்றைய நிலவரத்தை விட ஒரு சென்ரிமீற்றர் கூட முன்னாள் நகர முடியாமல் உள்ளனர். கட்சியாக வலையமைப்பை உருவாக்குவதா, கூட்டணியாக வலையமைப்பை உருவாக்குவதா என கடந்த ஒன்றரை வருடங்களாக அடிக்கடி கூடி பேசி, வீடுகளுக்கு வந்து படுத்து தூங்கி வருகிறார்கள். எனினும், கட்சிகளும் வலையமைப்பை உருவாக்கவில்லை, கூட்டமைப்பும் வலையமைப்பை உருவாக்கவில்லை.
கட்சி தலைமைகளின் இந்த செயலற்ற தன்மையினால், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளிலும் இருந்து எதிர்பார்ப்புக்களுடன் இந்த கூட்டணிக்கு வந்த கிட்டத்தட்ட பாதியளவானவர்கள் அதிருப்தியுடன் வெளியேறி விட்ட நிலையில், மீண்டுமொரு முறை கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.