ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவையை இடைநிறுத்த புத்தளம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல்லம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் அசாதாரண நடத்தை காரணமாக பல்லம பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை வரவழைத்து வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைத்தனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை குறித்த உத்தியோகத்தரை முந்தல் பொலிஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கும் புத்தளம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்பாடு செய்துள்ளார். புத்தளம் சட்ட வைத்திய அதிகாரி கடந்த 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தான் பரிசோதித்த பொலிஸ் உத்தியோகத்தரின் இரத்தத்தில் மெத்தம்பெட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த புத்தளம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கடமையின் போது போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவையை கடந்த 26 ஆம் திகதி முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.




