இந்திய பயணிகளுடன் பயணித்த போது, பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட தடுத்து வைக்கப்பட்ட விமானம் இன்று திங்கள் கிழமை புறப்ப அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில், பயணிகளிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று திங்கள்கிழமை விமானம் புறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா, கனாவிற்குள் குடியேற விரும்புபவர்கள், நிகரகுவாவுக்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்க, கனேடிய எல்லைக்குள் நுழைவதுண்டு. லெஜெண்ட் ஏர்லைன்ஸ் துபாயில் இருந்து 303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில், 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 11 பேர் யாருடைய துணையும் இல்லாமல் பயணித்துள்ளனர். விசாரணையின் போது, சிறார்களில் ஆறு பேர் புகலிடம் கோரி விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையெடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள வெட்ரி விமான நிலையில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டபோது, அந்த விமானத்தை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
விமானத்தில் இருந்த இருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அனைவரது பயண நோக்கம் பற்றி விசாரிக்கப்பட்டது.
பயணிகளில் 12 பேர் தஞ்சம் கோரியுள்ளதாக ஒரு ஆதாரம் AFP இடம் தெரிவித்துள்ளது.
மற்றொரு ஆதாரம் கூறுகையில், இந்திய பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) வேலையாட்களாக இருக்கலாம், அவர்கள் அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் நுழைவதற்காக நிகரகுவாவுக்குச் சென்றுள்ளனர்.