அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக ஜே.என்.1 வகை கரோனா தொற்று பரவிவருகிறது. தமிழகத்தில் தினமும் 20-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைநோயாளிகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கடந்த வாரம் சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சமீபத்தில்தான் அவர் சபரிமலை சென்று திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சென்னை மியாட் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் அடைந்ததே திடீரென்று தொற்று பரவல் அதிகரிக்க காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.