ரஸ்யாவுடனான போரில் உக்ரேனில் மூன்று இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்திகளை அடுத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை ஒரு நாடு என்ற வகையில், உள்ளூர் முகவர்கள் மூலம் ஆட்சேர்ப்புகளை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் சார்பாக போரிடுவதற்கு உள்ளூர் முகவர் ஒருவர் கூலிப்படையினரை ஆட்சேர்ப்பு செய்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முன்னர் தகவல் கிடைத்ததாகவும், அது கையாளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், யுத்தத்திற்காக உக்ரைனுக்குள் நுழைய நாட்டை விட்டு வெளியேறிய எந்தவொரு நாட்டவர் மீதும் அரசாங்கத்தால் எந்தவொரு கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையர்களின் தலையீடு தொடர்பாக ரஷ்யா இதுவரை இலங்கையிடம் எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.
உக்ரைனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படை அல்லது உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக இருந்த கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கை இராணுவத்தின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் திங்களன்று ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையின் போது உக்ரைனில் உள்ள பக்முட் நகரில் கப்டன் ஹெவகே மற்றும் அவரது சக இரண்டு இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் உள்ள இலங்கை தூதரகமே உக்ரைன் விவகாரங்களை கவனித்து வருகிறது. அது, இலங்கையர்களின் மரணம் குறித்து அறிந்துள்ளது மற்றும் உக்ரைனிய பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறது.
உக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் அத்தகைய நபர்களை அவர்களின் எச்சங்கள் மீட்கப்படும் வரை நடவடிக்கையில் காணவில்லை என்று கருதுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.



