பயண திட்டத்தை அறியாமல் முகவர் ஒருவரின் வழிநடத்தலில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியேற முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் நேற்று (9) பிற்பகல் குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனும், 19 வயது யுவதியே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் டுபாய் செல்வதற்காக நேற்று பகல் 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குடியகல்வு திணைக்களத்தினர் அவர்களது ஆவணங்களைப் பெற்று, அதற்கான அனுமதியை மேற்கொண்டிருந்த நிலையில், சந்தேகத்துக்கு இடமான நடத்தை காரணமாக குடிவரவு மற்றும் எல்லை அமலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களது பயணப்பொதிகளை கண்காணித்த போது, பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு செல்வதற்கான போலியான தகவல்களுடன் இரு வீசாக்கள் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றிய விசாரணையில், தரகர் ஒருவருக்கு 6 இலட்சம் ரூபாவை செலுத்தி இந்த விசாக்களை ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது.
நீர்கொழும்பில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த அவர்களிடம் தரகர் வீசாக்களை ஒப்படைத்தார். டுபாய் சென்ற பின், புறப்பட வேண்டிய அடுத்த இலக்கு குறித்து தெரிவிக்கப்படும் என்றும், தரகர் தமக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதுவரை தாங்கள் செல்லும் இடம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இருவரையும் கைது செய்த குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.