மலிவான விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு போலி கைது நாடகம் ஆடிய நடிகை உர்ஃபி ஜாவேத் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் ஆடைகள் அணிவதை வழக்கமாகக்கொண்டிருகிறார். இதற்காக பா.ஜ.க சார்பாக மும்பை போலீஸிலும் புகார்செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் தனது ஆடை விவகாரத்தில் உர்ஃபி ஜாவேத் சமரசம் செய்துகொள்ள மறுத்து வருகிறார். புதிதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சிறை வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உர்ஃபி நடித்திருக்கிறார். இதற்காக அடிக்கடி விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஆபாச உடையணிந்ததற்காக உர்ஃபி ஜாவேத்தை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் செல்வது போன்ற ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.
போலீஸ் உடையில் வந்த இரண்டு பேர் உர்ஃபியிடம் ஆபாச உடை அணிந்திருப்பதாகக் கூறினர். அதற்கு உர்ஃபி, தான் ஆபாச ஆடை அணியவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும் அந்த இரண்டு பெண் போலீஸார் உர்ஃபியைக் கைதுசெய்து வாகனத்தில் அழைத்துச் செல்வது போன்று வீடியோவில் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ குறித்து போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
விசாரணையில் உர்ஃபி ஜாவேத் விளம்பரத்துக்காக இது போன்ற ஒரு போலிக் கைது நாடகத்தை அரங்கேற்றியிருந்தார் என்று தெரியவந்தது.
இதையடுத்து உர்ஃபி ஜாவேத் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதோடு உர்ஃபி ஜாவேத்தை போலீஸ் உடையணிந்து கைதுசெய்த இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். ஒருவர் மலிவான விளம்பரத்துக்காகச் சட்டத்தை மீற முடியாது.
வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண் போலீஸார் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த தவறான விளம்பரத்துக்கு வழிவகுத்தவர் மீது ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலி இன்ஸ்பெக்டரும், கைதுசெய்யப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கின்றனர்.