நேபாள நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாகவும் பலி எண்ணிகை அதிகரிக்கலாம் எனவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஜாஜர்கோட் பகுதியில் லாமிடண்டா எனுமிடத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அளவீடு மையம் தெரிவித்துள்ளது.
நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், நாட்டின் முப்படைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். ஜாஜர்கோட்டுடன் தைலேக், சல்யான் மற்றும் ரோல்பா மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லி உள்பட நொய்டா, பாட்னா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது.
இமாலய மலையில் அமைந்துள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானதாகவே இருக்கின்றது. அந்த வகையில் நேபாளத்திலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 இலட்சம் கட்டிடங்கள் தரைமட்டமாகின என்பது நினைவுகூரத்தக்கது.