பாதாள உலகக் கும்பல் தலைவன் மகிழங்கமுவ சஞ்சீவ தடுத்து வைக்கப்பட்டுள்ள வீரகுள பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர், தான் தொழில் ரீதியாக சாரதி என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவரது கைத்தொலைபேசியை பரிசோதித்த போது, வீரகுள பொலிஸ் நிலையத்திலும் வீடியோ பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிலையத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளையும், பொலிசாரின் கைகளில் இருந்த துப்பாக்கிகளையும் இந்த நபர் காணொளியில் பதிவு செய்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனது மனைவி சந்தேகப்பிராணி என்றும், தான் செல்லும் இடங்களை சொன்னால் மனைவி நம்பவில்லை என்றும், அதனால் தான் அந்த இடங்களை வீடியோ எடுத்து காட்டுவதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியான இவரிடம் விசாரணைகளின் போது, வீதி விபத்து தொடர்பில் முறைப்பாடு செய்ய வீரகுள பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




