மதுபான நிலையதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகதுக்கு முன்பாக மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்தே குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
சுமார் 30 நிமிடம் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் பொலிசார் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடி போக்குவரத்தினை சீர் செய்தனர்.
பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிற்கு ஆதரவாக, பூநகரி வர்த்தகர்களும் கடைகளை அடைத்து போராட்டத்தில் இணைந்தனர்.
தொடர்ந்து பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை, பிரதேச செயலகம், பிரதேச சபை, கமநல சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானம், பெண்கள் தொழில் நிலையம் என முக்கிய சேவை நிலையங்கள் உள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட குறித்த மதுபான நிலையத்திற்கான அனுமதியை இரத்து செய்யக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மதுபானசாலை அண்மையில் திறக்கப்பட்டதிலிருந்து விளையாட்டு மைதான நிகழ்வுகளில் பல்வேறு குழப்பகரமான நிலைகள் தோற்றுவிக்கப்பட்டதகவும், சிறியவர்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பூநகரி பிரதேசத்தின் முக்கிய பகுதியில் குறித்த மதுபான நிலையம் அமைந்துள்ளதால், அதனை அகற்றி சமூகத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.