தங்கக் கடத்தல்காரரை கடத்திச் சென்று சுமார் இரண்டு கிலோ எடையுள்ள தங்கத் தூள் அடங்கிய ஜெல் பாக்கெட்டுகளை கொள்ளையடித்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி கடத்தல்காரர் டுபாய் செல்வதற்காக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போது, இரண்டு சார்ஜன்ட்களும் அவரை கடத்திச் சென்று, பொலிஸ்காரரின் வீட்டில் தடுத்து வைத்து, அவரை மிரட்டி, தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு சார்ஜென்ட்களும் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விமான நிலையப் பகுதியில் பணிபுரிபவர்கள்.
கொட்டாரமுல்ல கொஸ்வத்தையில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் (17) டுபாய் செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து பயணிகள் வெளியேற்ற முனையத்தில் தங்கியதாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த பயணி உண்மையில் டுபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வரவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது, இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், விமான நிலைய கழிவறையில் இவரை சந்தித்து, திட்டமிட்டபடி 8 தங்க ஜெல் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார்.
விமான நிலைய வெளியேற்ற முனையத்தில் காத்திருந்தவர், எட்டு ஜெல் பாக்கெட்டுகளை மறைத்து வைத்துக்கொண்டு, விமானத்தை தவறவிட்டுவிட்டதாக கூறிக்கொண்டு வெளிநாடு செல்லாமல் புறப்படும் முனையத்தில் இருந்து வெளியே வந்த போது இந்த தொழிலதிபர், சுற்றலா பொலிஸ் சார்ஜென்ட்களால் பிடிபட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வர்த்தகர் குறித்த தகவல், திட்டம் பற்றி அறிந்த ஒருவரால் இரண்டு சார்ஜன்ட்களுக்கும் வழங்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகத்தின் பேரில் இரண்டு சார்ஜன்ட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட இரண்டு தங்க ஜெல் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன. இதன் எடை 634 கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் அடையாள அணிவகுப்பு வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.