ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 2023 தொடரின் 8 வது லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி போராடி விரட்டி, சேஸிங்கில் சாதனை வெற்றியைப் பெற்றது. இதில் இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன்களை விளாசினார். சதீர சமரவிக்ரம 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 108 ரன்களை நொறுக்கினார். இதில் இன்சைட் அவுட் போய் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்த சிக்ஸ் நேற்றைய தினத்தின் சிறந்த ஷாட் ஆகும்.
பாகிஸ்தான் தரப்பில் பகர் ஜமானுக்கு பதிலாக இறங்கிய அப்துல்லா ஷபீக் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 103 பந்துகளில் 113 ரன்களை எடுக்க, விக்கெட் கீப்பரும் பாகிஸ்தான் அணியின் ஆபத்பாந்தவானவரும் எல்லா எதிரணிக்கும் அபாயகர வீரருமான ரிஸ்வான் 121 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து நொட் அவுட்டாகவும் திகழ, இதற்கு முன்னர் இங்கிலாந்தின் 327 ரன்கள் இலக்கை விரட்டி அயர்லாந்து பெங்களூருவில் செய்த உலகக் கோப்பை சாதனையை பாகிஸ்தான் முறியடித்து 345 இலக்கை வெற்றிகரமாக முடித்தது.
உண்மையில் இலங்கை அணி 44.3 ஓவர்களில் 308/3 என்று இருந்தது. அங்கிருந்து 33 பந்துகளில் 50-60 ரன்களையாவது விளாசியிருக்க வேண்டும் ஆனால் இலங்கை அணியில் ஆளில்லை. பவர் ஹிட்டர்கள் இல்லை. அதுதான் பாகிஸ்தானுக்கு சுலபமாகிவிட்டது. மேலும் பந்துவீச்சும் இலங்கை அணியின் மிகப்பெரிய பலவீனம். பெரும்பாலானவர்கள் சாத்து வாங்குகின்றனர். நேற்று மைதானத்தில் இலங்கை வீரர்கள் ஓடிய ஓட்டத்தை வீதியில் ஓடியிருந்தால் இலங்கைக்கே சென்றிருக்கலாம். ஒட்டுமொத்தமாக, குசல் மெண்டிஸ், சதீர ஆகியோரின் சதங்கள் வீணாகின.
ஆனால் உண்மையில் பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது குசல் மெண்டிஸ், சதீர துடுப்பாட்டம்தான். அப்துல்லா ஷபீக், ரிஸ்வான் துடுப்பாட்டம் அழகியலுக்கு உகந்ததல்ல.
நேற்று மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் கண்டது உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை வீரர்களின் அதிவேக சத சாதனையாகும். 29வது ஓவரில் மெண்டிஸ் அவுட் ஆகும் போது ஸ்கோர் 218/3. ஹசன் அலி போன்ற பந்துவீச்சாளர்களையெல்லாம் மெண்டிஸ் சாத்தி எடுத்து விட்டார். ஆனால் அவர் பந்தையே டீப் மிட்விக்கெட்டில் அடிக்க, அங்கிருந்த இமாம் உல் ஹக் கட்சைப் பிடித்தார். ஆனால் அவர் பிடித்த கட்ச் நியாயமானதுதானா என்ற ஐயம் அனைவருக்கும் எழுந்தது. கட்சை எடுத்த இமாம் உல் ஹக் நிலை குலைந்து கீழே விழுந்துவிட்டார். அவர் கீழே விழும்போது பந்து கையில் இருந்தபோது பவுண்டரி கயிறு நகர்ந்திருந்தது. ஆனால் எது எல்லைக்கோடு என்ற அடையாளம் தெளிவாக இருந்தது.
இமாம் உல் ஹக் கட்சை எடுத்தது என்னவோ பவுண்டரிக்கு உள்ளேதான். ஆனால் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது எல்லைக்கோட்டுக் கயிறு முன்பு இருந்த இடத்தின் அடையாளத்தின் மீது விழுந்தார். அதாவது எல்லைக்கோட்டின் மீதுதான் இமாம் உல் ஹக் கட்சுடன் விழுந்தார். ஆனால் இது கட்ச்தான் என்று முடிவெடுக்கப்பட்டது. குசல் மெண்டிஸ் நடுவர்களிடம் ஐயம் எழுப்பினார். அதாவது பாகிஸ்தான் வீரர்கள் பவுண்டரி கயிற்றை நகர்த்தி வைத்துவிட்டதாக இலங்கை வீரர்களும் சந்தேகம் எழுப்பி முறையீடு செய்தனர். ஆனால் போட்டி முழுவதுமே பவுண்டரி கயிறு அந்த இடத்தில்தான் இருந்து வருகிறது என்று ஐசிசி விளக்கம் அளித்ததால் அது நல்ல கட்ச் ஆனது. பாகிஸ்தான் – நெதர்லாந்து போட்டியின் போதே பவுண்டரி கயிறு நகர்த்தப்பட்டுவிட்டது. இலங்கை-பாகிஸ்தான் போட்டி முழுவதுமே அதே இடத்தில் பவுண்டரி கயிறு இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்ச்தான் ஆட்டத்தின் திருப்பு முனை. ஏனெனில் அதே ஓவரில்தான் ஹசன் அலி ஓவரை சிக்ஸராக விளாசி பின்னி எடுத்துக் கொண்டிருந்தார் குசல் மெண்டிஸ். இலங்கை அணி நேற்று பந்துவீச்சினால் தோற்றது. ஆனால் பாகிஸ்தான் பீல்டிங் நேற்று மகாமட்ட ரகமாக இருந்தது. ஏகப்பட்ட கட்ச்கள், மிஸ்பீல்ட்கள் என்று கோட்டை விட்டுவிட்டு கடைசியில் போட்டியை வென்றது பாகிஸ்தான் என்பது பெரிய நகைமுரணே.