யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இரத்த தானத்தை ஒழுங்கு செய்கின்ற ஒருங்கிணைப்பாளர்களும் தாமாக முன் வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து கொண்டுசெல்வதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர்ஜெய பாஸ்கரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வெளிநாடு செல்கின்ற இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாக இருக்கலாம். அதே நேரம் நாட்டில் பொருளாதர நிலைமை இன்னொரு பக்கமாக இருக்கலாம்.
தேக ஆரோக்கியமாக இருக்கின்றவர்கள் நீங்கள் எந்த நேரமும் நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இரத்தானத்தை வழங்கிச் செல்ல முடியும். நாம் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட பின்னரே உங்களிடமிருந்து இரத்தம் பெற்றுக் கொள்கின்றோம்.
ஆரோக்கியமானவர்களிடம் இருந்து மாத்திரமே தெரிவு செய்து இரத்தத்தை பெறுகின்றோம். இரத்ததானம் கொடுப்பதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியமானது வருடத்திற்கு ஒரு தடவையாவது பரிசோதிக்கப்படுகின்றது.
அதே நேரம் இரத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படுகின்ற உடல் ஆரோக்கியம் இதன் மூலம் உறுதி செய்து கொள்ளப்படுகின்றது. ஆகவேஇரத்தம் வழங்குவது அளப்பரிய சேவையாக இருக்கும் என்றார்.