குறைந்த வருமானம் பெறுபவர்களின் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதாக தான் அறிவித்ததாக தகவல் பரவியதை தொடர்ந்து, 1,500 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், யாருடைய மின் கட்டணத்தையும் செலுத்துவது தொடர்பாக தாம் ஒருபோதும் அத்தகைய அறிக்கைகளை வெளியிடவில்லை என்று கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களினதோ அல்லது வேறு எவரினதோ மின் கட்டணத்தை செலுத்தப் போவதாக தான் குறிப்பிடவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது ஜே.வி.பியின் சதியென்றும் குறிப்பிட்டார்.
“எனது வட்ஸ்அப் இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எந்த கட்டணத்தையும் நான் செலுத்த மாட்டேன்” என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் செலுத்தப்படாத 2.6 மில்லியன் மின்சார கட்டணத்தை சனத் நிஷாந்த செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருந்தது.
இது குறித்து சனத் நிஷாந்த குறிப்பிடுகையில்,
“யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் செலுத்தப்படாத மின் கட்டணத்தை செலுத்தினேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியலிலும் வியாபாரத்திலும் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்” என அவர் மேலும் தெரிவித்தார்.




