மலேசியாவின் கோலாலம்பூரில் வாடகை வீட்டில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் பணப் பிரச்சினை இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நகர காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
நான்கு சந்தேக நபர்களில் உயிரிழந்த ஒருவரின் பெற்றோரும், மேலும் இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான இரண்டு இலங்கையர்களும் அடங்குவர். பணப் பிரச்சினை மற்றும் கடன்கள்தான் கொலைக்கான காரணம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் வியாழக்கிழமை (5) செய்தியாளர்களிடம் கூறினார்.
செப்டம்பர் 22 ஆம் திகதி இரவு 11 மணியளவில், கம்போங் கோவில் ஹிலிரில் உள்ள ஜாலான் பெர்ஹெண்டியனில் உள்ள ஒரு கடை வீட்டின் ஸ்டோர் ரூமில் மூன்று இறந்த ஆண்களின் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டனர். அவர்களின் தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்த வீட்டை வாடகைக்கு பெற்றிருந்த தம்பதியின் மகன் மற்றும் அங்கு வாடகைக்கு குடியிருந்த இருவரே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான இரண்டு இலங்கையர்களும் செப்டம்பர் 25 பொலிசில் சரணடைந்தனர். அவர்களுடன், செப்டம்பர் 22 சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினரே கொலைக்குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
கைதாக இலங்கை தம்பதியில், கணவர் பொலிசாரின் விசாரணையில் உயிரிழந்து விட்டார்.
இதேவேளை, தப்பியோடிய 2 இலங்கையர்களும் தலைமறைவாக இருக்க உதவிய மூன்று இலங்கை ஆண்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு மாடி வீட்டில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இலங்கை தம்பதியினரின் தடுப்புக்காவல் செப்டம்பர் 29 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 30) காவலில் இருந்தபோது கணவர் இறந்துவிட்டார்.
இதனால் மொத்தம் ஏழு சந்தேக நபர்கள் இன்னும் விளக்கமறியலில் உள்ளனர் என்று அலாவுதீன் தெரிவித்தார். மூன்று இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இரண்டு பிரதான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.