எனது கொள்கைகள் இல்லாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு கங்காராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எனது கொள்கைகள் இல்லாத காரணத்தினால் நான் அவர்களுக்குப் பொது எதிரியாகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் வினவிய போது, முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து தேநீர் அருந்தியதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 64 ஆவது நினைவேந்தலில் செவ்வாய்க்கிழமை (26) இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒருவரையொருவர் சந்தித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தொடர்பில் வினவியபோது, அவருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.
“நாங்கள் நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்யவில்லை, ஆனால் தயாசிறி ஜயசேகர எமக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர்.
எனவே அவர் வழக்கை வாபஸ் பெற்று எம்முடன் பேச முடியும். குற்றப்பத்திரிகையில் உள்ள உண்மைகளை அவர் தீர்த்து வைத்து மீண்டும் எம்முடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்க முடியும். அதற்கு எந்த தடைகளும் இல்லை” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.