யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் இன்று (20) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நாளை போராட்டம் நடைபெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, கடந்த 12ஆம் திகதி யாழ் மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தில் உள்ள ஏனைய 4 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், யாழ் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்திய சாலைகளான சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் இன்று (20) நண்பகல் 11:30 மணியிலிருந்து 1 மணி வரையிலும், மறுநாள் 21 ஆம் திகதி நண்பகல் 11.30 மணியிலிருந்து 1 மணி வரையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.