சீதுவ, தடுகங் ஓயா கரைக்கு அருகில் பயணப் பையில் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குடுவெவ, மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுசந்த ரஞ்சன் ரணசிங்க (36) என்ற திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதான சந்தேகநபரின் மூத்த மகனை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய சம்பவத்தின் அடிப்படையில், அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் மீது வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மாதம்பே, கட்டான, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட இளைஞனும் சந்தேகநபர்களும் நட்பாக பழகியவர்கள். கடந்த 11ம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் வெளிநாட்டு முகவரை, சந்தேகநபர்கள் சந்தித்துள்ளனர். முகவருக்கு சந்தேகம் ஏற்படாத விதமாக காரில் ஏற்றிக்கொண்டு கட்டான தாகொன்ன 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு வைத்து, பணம் கேட்டு கைகளாலும் தடியாலும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.




