யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 12 வயது சிறுமியின் அகற்றப்பட்ட கையை, மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகத்தை சேர்ந்த சாண்டில்யன் வைசாலியென்ற சிறுமி தோல் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டு, காய்ச்சலுடன் தனியார் வைத்தியசாலையை நாடியுள்ளார். அங்கு அவருக்கு கனுலா ஏற்றப்பட்டு, வீட்டிலிருந்து தனியார் வைத்தியசாலைக்கு வந்து ஊசியேற்றி சென்றுள்ளார். பின்னர் நொதேர்ன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு கைகளிலும் கனுலா ஏற்றப்பட்டு மருந்து செலுத்தப்பட்டதாகவும், அங்கிருந்தும் மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள தாதியும் தெரிவித்திருந்தார்.
இதன் பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டது.
சிறுமியின் கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த தவறினால் அகற்றப்பட்டதா அல்லது தனியார் வைத்தியசாலைகளில் நடந்த தவறினால் அகற்றப்பட்டதா என்பது தெரியாத நிலையில், அது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, விசாரணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய மேலும் 10 நாட்கள் தேவையென தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு, கை அகற்றப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.