ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தகவலை சனல் 4 வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தினால், அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடந்த அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக சனல் 4 இந்த ஆவணத்தை வெளியிட்டது, ஜெனீவாவில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தவே என அரசாங்கம் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனல் 4 வழமை போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும், எனவே அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஒட்டுமொத்த அரசாங்கமும் பதிலளிக்காமல் இருப்பதெனவும், அதற்குப் பதிலாக, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, முறைசாரா வழிகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய நோக்கங்கள் குறித்து கேள்விப்பட்ட போதிலும் தமக்கு அவ்வாறான கோரிக்கை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.



