நடிகை விஜயலட்சுமி நேற்று இரவு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்த நிலையில், விஜயலட்சுமி வெளியேறி விட்டார் என செய்தியாளர்களை நம்ப வைத்து, அங்கிருந்து கிளம்ப வைப்பதற்காக, பெண் போலிசுக்கு விஜயலட்சுமி போல வேடமிட்டு பொலிசார் அரங்கேற்றிய நாடகம் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார்.
தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார்.
சமீபத்தில் விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார்.
அதில், 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவரை விடக்கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
விஜயலட்சுமி தனது புகாரில், சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன், உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார். என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார்.
அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள 3ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது. அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார். எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார்.
எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார். என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன்.
என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம். பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம்.
அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.
சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன். என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் என்னை கட்டாயபடுத்தியும் நிர்பந்தபடுத்தியும் கருச்சிதைவு மாத்திரைகள் எனக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எனக்கு கருச்சிதைவு செய்தார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி உள்ளார்.
தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அந்த வழக்கானது அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே புகார் மனு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்திருந்தார்..
இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில், நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். இரவு 10 மணி தாண்டியும், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரனையின் போது, விஜயலட்சுமி காவல்நிலையத்திலிருந்து வெளியே வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் விசாரணையின் போது அவருக்கு சற்று மயக்கம் ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல் நிலையிலிருந்து செல்வேன் என விஜயலட்சுமி அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். பத்திரிகையாளர்களும் காவல் நிலையத்தை சூழ்ந்து இருந்ததால் நடிகை விஜயலட்சுமியை கமுக்கமாக அனுப்பி வைக்க போலீசார் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
நடிகை விஜயலட்சுமி போன்று ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உருவ ஒற்றுமையுடைய பெண் போலீஸ் ஒருவரை தயார் செய்து, அவரது முகத்தை துப்பட்டாவால் மூடி அவசர அவசரமாக காரில் ஏற்றி செல்வதுபோல், காவல் நிலையத்திலிருந்து கார் வேகமாக சென்றது. ஆனால் அந்த காரில் எந்த பெண் போலீசும் செல்லாததால் சந்தேகம் எழும்பியது.
இருப்பினும் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தை விட்டு செல்லாமல் அங்கேயே உடும்பு பிடியாய் நின்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல், போலீசார் மீண்டும் ஒரு நாடகத்தை நடத்தி பத்திரிகையாளர்களை அங்கிருந்து செல்வதற்கு ஏற்படும் செய்தனர்.
ஆனாலும் விடாப்பிடியாக பத்திரிகையாளர்கள் அங்கிருந்து செல்லாததால், இதற்கு மேலும் சமாளிக்க முடியாது, தூக்கம் கண்ணை கட்டுகிறது என்று தனியார் கார் ஒன்றை போலீஸ்காரர் எடுத்து வந்த நிலையில், சர்வ சாதாரணமாக நடிகை விஜயலட்சுமியை காரில் போலீசார் அழைத்து சென்றனர்.
நடிகை விஜயலட்சுமி போலீஸ் நிலையத்திலிருந்து சென்ற பிறகு பெண் போலீசை ஏற்றி கொண்டு வேகமாக சென்ற வாகனம், சாவகாசமாக காவல் நிலையத்தை வந்தடைந்தது. இதுகுறித்து துணை கமிஷனரிடம் கேட்டபோது, எந்தவித பதிலும் பேசாமல் வாயை மூடியபடி அமைதியாக காரில் ஏறி சென்றார்.
விசாரணைக்கு வந்த நடிகை விஜயலட்சுமி விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதற்குள் ஒரு சினிமா பட காட்சியை போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசார் நடத்திய நாடகம், சினிமா காட்சிகளையே மிஞ்சுவது போல் சுவாரஸ்யமாகவும், சிரிப்பலையை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.




