நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.81 கோடி வசூல் அள்ளியுள்ளது. உலக அளவில் ரூ.300கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் 2.0 படத்துக்குப் பிறகு அதிவேகமாக ரூ.300 கோடியை எட்டிய திரைப்படமாக ‘ஜெயிலர்’ மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘ஜெயிலர்’ படம், 4 மில்லியன் டொலரை (சுமார் ரூ. 33 கோடியே 18 லட்சத்து 27 ஆயிரம்) வசூலித்துள்ளது. இதற்கு முன்‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் மட்டுமே முதல் வாரத்தில் 4 மில்லியன் டொலர் வசூலித்திருந்தது. அதை ‘ஜெயிலர்’ படம் சமன் செய்துள்ளது. தமிழ் நாட்டில் இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, “கடந்த 4 நாட்களில் ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் சிறப்பாக இருக்கிறது. ரூ.81 கோடி வசூலித்துள்ளது. இன்னும் அதிகமாக வசூலிக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகமும் அதற்கு அடுத்த இடத்தில் கமலின் ‘விக்ரம்’ படமும் இருக்கிறது.அதை ‘ஜெயிலர்’ முந்துமா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையே ‘ஜெயிலர்’ படத்தை பார்த்த நடிகர் கமலஹாசன் இயக்குநர் நெல்சனையும், ரஜினிகாந்தையும் பாராட்டியுள்ளார்.