பொதுஜன பெரமுனவின் முன்னணி தலைவர்களுக்கும், அந்த அணியிலிருந்து பிரிந்து தற்போது ரணில் ஆதரவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள மோதல் அரசியல் நெருக்கடியாக உருவாகி வருவதாக அறிய முடிகிறது.
பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள ஒரு குழுவினரை இழுத்தெடுத்து, பெரமுனவில் அதிருப்தியடைந்து வெளியேறியவர்களையும் இணைத்து, புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க முயற்சித்து வருவதே நெருக்கடிக்கு காரணமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னணியிலேயே நிமல் லான்சா இந்த நகர்வை மேற்கொள்வதாக ஊகிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவில் உள்ள சில எம்.பிக்கள் அதிருப்தியடைந்து வெளியேற முடிவு செய்துள்ளதன் பின்னணியில் நிமல் லான்சா எம்.பி சம்பந்தப்பட்டிருப்பது கட்சிக்கு சிக்கலாக மாறியுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஒரு குழுவினரை ஒன்றிணைத்து இந்த புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா செயற்பட்டு வருகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் மஹிந்த அமரவீர, நிமால் சிறிபபால டி சில்வா, ரஞ்சித் சியம்பலபிட்டிய உள்ளிட்ட ஒரு குழுவினரையும் இணைத்து, சுமார் 50 வரையான எம்.பிக்களை கொண்ட குழுவாக இந்த அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படியே லான்சா செயற்படுவதாகவும், அவருக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அலுவலகம் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




