பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாததை ஒரு பிரச்சினையாக மாற்றி, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை குழப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (4) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் தற்போது இன்னொரு கட்சியின் தயவில் உள்ளார். அவரது கட்சியில் இருந்தவர்களோடு சேர்ந்து செயற்பட்டால் அவருக்கு நன்மை தரும். அவரோடு இருப்பவர்கள் அவருடன் சேர்ந்திருந்திருந்து விட்டு அவரது காலைவாருவார்களா என்பதும் தெரியாது. நான் முதலமைச்சராக இருந்தபோது நடந்ததை போல. நான் ஒரு கட்சியிலிருந்து வந்து முதலமைச்சரானேன். அவர்களோடு சேர்ந்திருக்க, என்னோடு இருந்தவர்களே எனது காலை வார முயன்றனர். தப்பி விட்டேன்.
ஜனாதிபதி வேலைக்கு சஜித் பிரேமதாசா சரியில்லையென்பது எனது கருத்து.
சமஸ்டிதான் எமது குறிக்கோள் என கட்சிகள் சொன்னார்களே தவிர, எந்த வழியால் சென்று சமஸ்டியை அடையப் போகிறோம் என கட்சிகள் சொல்லவில்லை. சமஸ்டியை எப்படி அடைவது என்பதில் எமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒரே குறிக்கோளை வைத்துள்ளது சிங்களவர்களுக்கு முக்கியமான விடயம். நாங்கள் அனைவரும் சமஸ்டியை குறிக்கோளாக கொண்டுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார். சமஸ்டியை எப்படி அடையப் போகிறோம் என எந்த கட்சியும் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. ஆகவே இது எமது எதிர்பார்ப்பு.
ஏன் நாம் சமஸ்டியை கேட்கிறோம்? இலங்கையின் அரசியலமைப்பு ஒற்றையாட்சி. மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். அவர்கள் சில நேரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற முடியும். அரசியல் யாப்பின்படி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு எதையும் செய்யலாம். சிங்களம் மட்டும் சட்டம், தரப்படுத்தல் எல்லாம் இப்படித்தான் வந்தது. பெரும்பான்மை மக்கள் தமக்கு தேவையான சட்டங்களை கொண்டு வந்து சிறுான்மையினருக்கு எதிராக செயற்படலாம். அதனால்தான் சமஸ்டியை கோருகிறோம். இதில் தமிழ் கட்சிகளிற்குள் பேதமில்லை. வேறு எதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேறுபடுகிறார்கள் என தெரியவில்லை. அனைவரும் ஒருமுறை உட்கார்ந்து பேசினால் சரியாகிவிடும்.
ஜனாதிபதி 13வது திருத்தம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்போகிறார். அவர் என்ன பேசப்போகிறார் என தெரியவில்லை. பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறலாம். பொலிஸ் அதிகாரத்தை அவர்கள் தவிர்த்தாலும், அதை ஒரு பிரச்சினையாக மாற்றி 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தாமலிருப்பதை தவிர்க்க பார்க்கிறோம்.
எந்த அரசியல்வாதியும் எது சரியென்பதை பார்த்து செயற்படுவதில்லை. மக்கள் எதை ஆதரிப்பார்கள் என பார்த்துத்தான் செய்வார்கள்.
மாகாணசபைகளை எப்படி அதிகாரமிக்கதாக மாற்ற முடியுமென்பது குறித்த ஒரு ஆவணத்தை கலாநிதி விக்னேஸ்வரனுடன் இணைந்து ஒரு ஆவணத்தை கையளித்துள்ளேன். அதை நடைமுறைப்படுத்துவதாக கூறியுள்ளார்.
அவர் அதைத்தான் கூறப்போகிறாரா என தெரியாது. ரணில் அண்மையில் இந்தியா போய் வந்துள்ளார். தம் ஊடாக தயாரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டும், தமிழ் மக்களில் அதிகார பகிர்வு நடத்தப்பட வேண்டுமென மோடி குறிப்பிட்டுள்ளார். சிங்கள கட்சிகள் சொல்வதை போல, அவர்கள் விரும்பியபடி அதிகாரங்களை குறிக்க முடியாது. அதை சர்வகட்சி கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில் இரண்டு அரசுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் அது.
ரணில் பாராளுமன்றத்தில் 13வது திருத்தம் பற்றி உரையாற்ற முன்வந்தது நல்ல விடயம். இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கம் என்ன மனோநிலையில் உள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவும்.
13வது திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் எப்படி ஆதரவு கிடைக்கமென சொல்ல முடியாது. அவர் சிங்கள மக்கள் அனைவரும் தம்மை ஆதரிப்பார்கள் என நினைத்து செயற்படுகிறார் என நினைக்கிறேன்.
இதில் இன்னொரு விடயமும் உள்ளது. மற்றைய 7 மாகாணங்களில் உள்ள சிங்கள மக்கள் தலைவர்கள் பொலிஸ் அதிகாரம் தமக்கும் தேவையென பேசியுள்ளனர். பொலிஸ் அதிகாரங்களை தமிழர்களுக்கு கொடுப்பதில்தான் அவர்களுக்கு பிரச்சினை.
பொலிஸ் அதிகாரங்களை அந்தந்த மாகாணங்களிற்கு வழங்கி, அங்குள்ள படித்த இளைஞர்களை வேலைக்கமர்த்துவதில் என்ன பிரச்சினையென்ற கேள்வியெழப் போகிறது. எமது இளைஞர்கள் பொலிசில் இணைந்த பின் வன்முறையில் இறங்கலாம் என நினைத்தால், பாண்டிச்சேரியில் உள்ளதை போல பொல்லும், கைவிலங்கும் கொடுத்து வரையறுக்கப்பட்ட பணிகளை செய்யலாம் என்றும் கூறியிருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால், நாங்கள் சிறிதுசிறிதாக எமது மக்களுக்குரிய அதிகாரங்களை கைவசம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளும் எதேதோ பேசுகிறார்கள். சமஸ்டி, கூட்டு சமஸ்டியென்றெல்லாம் பேசுகிறார்கள். இவையெல்லாம் எங்கோ இருக்கின்ற- தூரத்து குறிக்கோள். இப்பொழுது எமது மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், நாம் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொண்டு அதிகார விட்டத்தை படிப்படியாக பெரிதுபடுத்திக் கொண்டு போக வேண்டும். அதனால்தான் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும்படி கேட்கிறோம். அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வில்லையென்பது எல்லோருக்கும் தெரியும். அனால் இப்பொழுது தமிழ் மக்களுக்கு அதிகாரம் தேவை. அது கிடைத்தால் தற்போது பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் செய்யும் பல விடயங்களை தடுக்கலாம்.
நீங்கள் 13வது திருத்தத்தை ஏற்றால், சிங்களவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள், நீங்கள் வேறு ஒன்றையும் கேட்கவில்லையென கூறுவார்கள் என வெளிநாட்டிலுள்ள உறவுகள் சிலர் என்னில் கோபிக்கிறார்கள். நான் அதை எதிர்பார்த்ததுதான். அவர்களை பொறுத்தவரை 13 கொடுத்து விட்டோம். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது என சொல்லப் பார்ப்பார்கள். ரணிலும் அப்படி சொன்னால், அது சரியா பிழையா என்பதை எடுத்துக்காட்டுவது எமது கடமை. அதை நாம் செய்வோம்.
நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். 13 தேவையில்லை, சமஸ்டிதான் தேவையென்றால், 13ஐயும் தராமல் விட்டு விடுவார்கள். கடந்த சர்வகட்சி கூட்டத்தில் ரணில், சுமந்திரனிடம் கூறினார், 13 உங்களுக்கு தேவையில்லையென்றால் விட்டுவிடுவோம் என. அதுவும் இல்லை, இதுவும் இல்லையென ஆகிவிடும். நாம் பேசும்போது கவனமாக மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் விதமாக செயற்பட வேண்டும்.
சமஸ்டியை கேட்பது ஒன்று, இருக்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது இன்னொன்று. அதை நாம் தேவையான நேரத்தில் அவருக்கு விளக்கமளிப்போம் என்றார்.