கிரேட் வெஸ்டர்ன் மலைத் தொடரின் உச்சியில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இடம்பெற்றதுடன் சடலத்தை கீழே இறக்குவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இலங்கை இராணுவத்தில் கோப்ரல் ஒருவர் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலையின் மேல் பகுதியில் மரணமான இவர், மலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
கோப்ரல் ஒருவர் சுகவீனமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
நுவரெலியா இராணுவ முகாமில் கடமையாற்றும் அனுராதபுரம் எல்லும்கசாய, தூதுவெவ பகுதியைச் சேர்ந்த சந்துன் குமார ஹேரத் (37) என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் உள்ள செங்குத்தான பள்ளத்திற்கு அருகில் விழுந்து கிடந்த இந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மலை ஏறும் நோக்கத்திற்காகவே தவிர வேறு எவரும் மலை உச்சிக்கு செல்வதில்லை எனவும் இது கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.