சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார் மலேசியா நாட்டு வீரர் ஷியஸ்ருல் இட்ருஸ். 4 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய தகுதி சுற்றுக்கான குவாலிபையர் பி பிரிவு போட்டிகள் இன்று மலேசியாவில் தொடங்கியது. முதல் போட்டியில் சீனா மற்றும் மலேசிய அணிகள் விளையாடின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற சீனா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இருந்தும் 11.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி.
மலேசிய அணிக்காக பந்து வீசிய ஷியஸ்ருல் இட்ருஸ் 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். 20 டொட்கள் (ரன் ஏதும் கொடுக்காமல் வீசிய பந்துகள்) இதில் அடங்கும்.
இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஆடவர் பிரிவில் ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சிலாளராக உள்ளார்.
7 விக்கெட்டுகளையும் ஸ்டம்புகளை தகர்த்து க்ளீன் போல்ட் முறையில் எடுத்துள்ளார் அவர். இந்தப் போட்டியில் மலேசியா அணி 91 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.