வவுனியாவில் இன்று அதிகாலை வீடொன்றிற்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டை தீயிட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான குடும்ப உறுப்பினர் ஒருவர், தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த கும்பலின் தாக்குதலில் 21 வயதான இளம் பெண் தீயில் கருகி உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டில் தங்கியிருந்த சுகந்தன் என்ற நபரை இலக்கு வைத்தே இந்த கும்பல் வந்துள்ளது. சுகந்தனின் மனைவியான பாத்திமா சம்மா சபீதிர் (21) என்பவரே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 12 மணியளவில் சிறு குழந்தையொன்றின் பிறந்தநாள் நிகழ்வில் வீட்டிலிருந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வீட்டில் கடந்த 6 நாட்களாக உயிரிழந்த பெண்ணும், கணவரும் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் கொழும்பில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஓமந்தையில் பெரிய வீடொன்றும் உள்ளது. உயிரிழந்த பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரனின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.
அந்த வீட்டில் சிசிரிவி பாதுகாப்பு கமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டுக்கு வந்த குழுவொன்று கூப்பிட்டதையடுத்து, வீட்டு உரிமையாளர் வெளியில் சென்று கதவை திறந்துள்ளார். அவருக்கு வாள்வெட்டு விழுந்தது. இரண்டு சிறிய வாள்வெட்டு காயங்களுடன் அவர் வீட்டுக்குள் ஓடி வந்துள்ளார்.
அவரை பின்தொடர்ந்து வந்த வாள்வெட்டுக்குழு, வீட்டுக்குள் நுழைந்து, சுகந்தன் எங்கேயென வினவியுள்ளது.
அத்துடன், வீட்டிலிருந்த அனைவரையும் வெளியே செல்வுமாறும், வீட்டை தீயிடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்கள் வெளியில் செல்லாமல், வீட்டினுள்ளே பாதுகாப்பாக பதுங்கியுள்ளனர்.
அவர்கள் இரண்டு சிறிய கலன்களில் பெற்றோல், ரின்னர், கழிவு ஓயில் கலந்து கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீட்டுக்குள் ஊற்றி தீமூட்டியுள்ளனர்.
அவர்கள் பெற்றோல், ஓயிலை வீசியபோது, அங்கிருந்த சிலர் மீதும் அவை விழுந்தன. தீ மூட்டப்பட்டபோது வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடிவந்தனர். அவர்கள் தீக்காயங்களுக்கும் உள்ளாகினர்.
வீட்டின் உள் அறையில் இருந்த சுகந்தனும், மனைவியும் வெளியே ஓடிவந்த போது, தீயில் சிக்கினர். இதன்போது, சுகந்தனின் பிடியிலிருந்து மனைவி தவறியிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
காயங்களுடன் சுகந்தன் வீட்டிலிருந்து வெளியே தப்பியோடினார். தீ அணைக்கப்பட்ட பின்னர், வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 2 வயதுடைய சிறுவன், 7 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள், 42 வயதுடைய ஆண் மற்றும் 36 வயதுடைய சுகந்தனும் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களை போல, வவுனியாவிலும் சில வன்முறை குழுக்கள் இயங்குகின்றன. வீடெரிப்பில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு, இந்த குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், இந்த மோதல்களின் எதிரொலியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-வவுனியா நிருபர் ரூபன்-




