13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘இரகசிய கடிதத்தில்’ இரா.சம்பந்தன் கையெழுத்திடாததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்.
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – இந்தியாவின் வகிபாகமும்
பற்றிய கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (15) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
“13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நாங்கள் அனுப்பிய முதலாவது கடிதத்தில் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டிருந்தார். அதேவிடயத்தை வலியுறுத்தி தற்போது அனுப்பிய கடிதத்தில் அவர் கையொப்பமிடவில்லை.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முன்னர் கையெழுத்திட்டபோது அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர். தற்போது அவர் சாதாரண எம்.பி. தமிழர் அரசு கட்சியின் சார்பில் கையெழுத்திடுவதென்றால் கூட மாவை சேனாதிராசாதான் கையொப்பமிடுவார். இரா.சம்பந்தனால் கையெழுத்திட முடியாது. அந்த சங்கடம் அவருக்கு இருந்திருக்கலாம். அதனால் நாங்கள் அவரை ஓரளவுக்கு மேற் வற்புறுத்தவில்லை“ என்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதி பா.கஜதீபன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பூ.பிரசாந்தன், இலங்கைத் தமிரசுக் கட்சி சார்பாக நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சி.தவராசா, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன், சமத்துவக் கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம், இராஜநாதன் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணியின் 6 கட்சிகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்ற போதும், அதை உறுதி செய்ய முடியவில்லை. அனுப்பி வைத்த கடிதத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




