ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் பயணிகள் பேரூந்து விபத்துக்குள்ளாகி 11 பேர் பலியாகிய சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
பேருந்தின் spring leaf உடைந்திருந்தது. அதீத வேகத்தில் பயணித்ததே விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடைந்த spring leaf உடன் சாரதி அதிவேகமாக செலுத்தி கொட்டலிய பாலத்திற்கு அருகில் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொலன்னறுவை, மன்னம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் நேற்று முன்தினம் (9) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 41 பேர் காயமடைந்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ் சாரதியை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட 10 ஆண்களும் பெண்ணொருவரும் உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த தனியார் பேருந்துக்கு வடமத்திய மாகாண வீதிகளில் ஓட்டுவதற்கான வீதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனம் செலுத்தியமையே இந்த விபத்துக்கான காரணம் என மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த, பொரவெவ இல.130 இல் வசிக்கும் 18 வயதுடைய இளைஞனும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் தனியார் துறையில் பணிபுரியும் இளைஞன், தனது பெற்றோருடன் தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, கதுருவெல நகரிலிருந்து புறப்படும் கல்முனை பேருந்தில் ஏறியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் எஞ்சியவர்கள் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தின் பின்னர், மன்னம்பிட்டிய பொலிஸார், இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சுமார் 3 மணித்தியாலங்கள் இணைந்து பேருந்தில் சிக்கி காயமடைந்த சுமார் 41 பேரை மீட்டு, தனியார் வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் மூலம் மனம்பிட்டி மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதித்தனர்.
பேரூந்து விபத்தில் உயிரிழந்த சிலரின் விபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், அவர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கைத்தொலைபேசிகள், அவர்களின் பயணப்பொதிகள் கொட்டலிய ஓயாவில் விழுந்துள்ளது.




