அவுஸ்திரேலியாவில் வசிக்கும் போது உயிரிழந்ததாக கூறப்படும் நபருக்கு சொந்தமானது என கூறப்படும் கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வீடொன்றை சுவீகரிக்க வந்த 26 பேர் கொண்ட குழுவொன்று குருதுவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீட்டின் திசையிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக குருதுவத்தை பொலிஸாருக்கு சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிரகாரம் குருதுவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் விசாரணைக்காக குறித்த இடத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு சென்ற பொலிசார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடைபெறவில்லை என்பதை அறிந்தனர். ஆனால் தோட்டத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் கூடிய ஒரு பெரிய குழுவை அவர்கள் கண்டனர்.
பொலிசார் அங்கு சென்றதும் பலர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் அவுஸ்திரேலியாவில் சில காலமாக தங்கியிருந்ததாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டையும் நிலத்தையும் சுத்தப்படுத்துவது என்ற போர்வையில் வேறு ஒருவரின் திட்டத்திற்கிணங்க சிலர் அந்த இடத்திற்கு வந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 27 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், இந்த நிலத்தையும் வீட்டையும் ஆக்கிரமிப்பதில் இரு குழுக்களிடையே போட்டி நிலவி வருவது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தம் குறித்த தொலைபேசி அழைப்பை மற்றைய குழுவினர் கொடுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (10) நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளது.