பிரபல மலையாள நடிகை அர்த்தனா பினு. இவர் தமிழில் வெண்ணிலா கபடி குழு 2ஆம் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஜி.வி.பிரகாசுடன் செம, சமுத்திரக்கனியுடன் தொண்டன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அர்த்தனாவின் தந்தை விஜயகுமார் பிரிந்து சென்று விட்டார். தற்போது தாய், சகோதரி மற்றும் பாட்டியுடன் அர்த்தனா வசிக்கிறார்.
இந்த நிலையில் தனது வீட்டுக்குள் தந்தை சுவர் ஏறி குதிப்பதையும், ஜன்னல் வழியாக மிரட்டுவதையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை விஜயகுமார் மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவரும், எனது தாயும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். எனது தாயுடன் நான் வசிக்கிறேன். எனது தந்தை நாங்கள் வசிக்கும் வீட்டிலும், படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களிலும் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுக்கிறார்.
சினிமாவில் நடிக்க கூடாது என்கிறார். மீறி நடித்தால் அவர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிறார். எனது சகோதரி மற்றும் பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.