வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிய வீரசேகர… கீழே இறக்கப்பட்ட பிக்குகள்; முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு நேரில் சென்ற நீதிபதி: நடந்தது என்ன?

Date:

தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள தமிழ் பௌத்த எச்சங்களின் மீது சட்டவிராதமாக அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரை கட்டமைப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் நேற்று (4) நேரில் சென்று பார்வையிட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு இரண்டாவது தடவையாக நேற்று  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குருந்தூர் மலைக்கு சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டார். இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தொல்பொருள் திணைக்கள பதில் பணிப்பாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

குருந்தூர் மலையில் 12.06.2022 அன்று இருந்த சூழ்நிலை பேணப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறி அந்த இடத்தில் மேம்படுத்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளதை ஆதரத்துடன் நிருப்பித்துள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அது தொடர்பில் நேற்று நீதவான் குருந்தூர் மலைப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்றுள்ள விடயங்களை குறிப்பெடுத்துள்ளார்.

இது தொடர்பாக பதில் அறிக்கையை ஓகஸ்ட் 8ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கும் தொல்லியல் திணைக்கத்திற்கும் உத்தரவிட்டார். அதன் பின்னர், அதுதொடர்பிலான கட்டளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்படும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பில் மூத்த சட்டத்தரணியான கே.எஸ்.ரண்டவேல் தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையானதுடன் குருந்தூர் மலைக்கு சென்றும் பார்வையிட்டு உண்மைத்தன்மையினை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்கள்.

சட்டவிரோத கட்டுமானத்துக்கு ஆதாரம்

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றை சுட்டிக்காட்டிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்ந்த சட்டத்தரணிகள், அது தொடர்பில் கேள்வியெழுப்பினர்.

அந்த கல்வெட்டில்- வெற்றி உண்டாகட்டும் என்ற தலைப்பில் உள்ள குறிப்பில்-

முல்லைத்தீவு குருந்தி விகாரையில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தூபி 2000 வருடங்களை கடந்த பெருமைமிக்கது. 37 அடி உயரமும் 16.5 அடி ஆரையும் கொண்டது. இலங்கையில் தற்போது காணப்படுகின்ற தூபிகளில் முற்றத்தில் இருந்தே செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு தூபி இதுவென்பதோடு, இதற்கு கீழே காணப்படும் சுவரின் சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட யானைகளின் வரிசை, யானைகளுக்கு இடையே காணப்படும் தூண்கள் வளையம் உட்பட அனைத்து செதுக்கல் வேலைகளும் செங்கற்களாலேயே செதுக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி கலகமுவ சாந்தபோதி தேரரின் வழிகாட்டலின் கீழ், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகன் அனுரமானதுங்கவின் பங்குபற்றலுடன், தொல்பொருள் அதிகாரிகளின் மேற்பார்வையில், இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் அயராத பங்களிப்புடனும் பௌத்த லோக நற்பணி மன்றத்தின் முழுமையான நிதி பங்களிப்புடனும் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டே, சட்டவிரோத கட்டுமானத்தின் ஆதாரம் என்பதை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி என சொல்லப்பட்ட இடத்தில் பௌத்த லோக நற்பணி மன்றத்தால் எவ்வாறு விகாரை கட்டப்பட்டது என ஆதி சிவன் அய்யனார் ஆலய சட்டத்தரணிகள் அந்த இடத்தில் வைத்து நீதிபதியடம் சுட்டிக்காட்டினர்.

நினைவுக்கல்லில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த லோக நற்பணி மன்றத்தால் விகாரை நிறுவப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அது அமைக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், கட்டுமானங்களை அமைக்க பிற நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கும் அதிகாரம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இல்லை. அதனால் இந்த நினைவுக்கல்லும், அது குறிப்பிடும் கட்டுமானங்களும் சட்டத்துக்கு புறம்பானவை என்று ஆதிசிவன் அய்யனார் ஆலய சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் கல்வெட்டின் குறிப்பிடும் பல கட்டுமானங்கள் தற்போது இல்லை. அது எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள கட்டுமானங்களை குறிக்கின்றதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பௌத்தலோக நற்பணி மன்றத்தின் சார்பில் பிரசன்னமான சட்டத்தரணி தனது ஆட்சேபனை அந்த இடத்தில் நீதிபதியிடம் முன் வைத்தார். இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் சட்டங்களின்படி இந்த கட்டுமானங்களை செய்து வருகின்றது. தொல்பொருள் சட்டத்தின் விதிமுறை மீறி செயல்பட்டு இருந்தால் அவற்றை அகற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இங்குள்ள அனைத்தும் தொல் பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது. இங்கு புனரமைப்ப செய்தது யார் என்பது எதிர்கால சந்ததிக்கு தெரிய வேண்டும் என்பதால் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என சப்பைக்கட்டு கட்டினார்.

வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய வீரசேகர

இதன்போது, குருந்தூர் மலையில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னாள் மாகாணசகை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

முல்லைத்தீவு நீதிவான் சட்டவிரோத கட்டுமானங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். நீதிபதியிடம் சென்று, தான் பாராளுமன்ற உறுப்பினர் வீரசேகர என குறிப்பிட்டு, குருந்தூர் மலை பற்றி பேச முற்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்து தெரிவிக்க முடியாதென்றும், இங்கு நீதிமன்ற விசாரணைகளே நடைபெறுவதாகவும், உடனடியாக இந்த இடத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் வீரசேகரவை நீதிவான் எச்சரித்தார்.

இதையடுத்து வீரசேகர வாயை மூடிக்கொண்டு விலகிச் சென்றார்.

கீழே இறக்கப்பட்ட பிக்குகள்

சரத் வீரசேகர இப்படி வாங்கிக்கட்டிய அதேவேளையில், பிக்குகளும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டு, கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத சிங்கள பௌத்த கட்டுமானத்தை நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்குகள் தமது இஸ்டப்படி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இது நீதிபதியின் கண்ணில் தென்பட, இது பற்றி பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

உடனடியாக செயற்பட்ட பொலிசார், நீதிமன்ற விசாரணைகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி, உனடியாக குருந்தூர் மலை சட்டவிரோத விகாரையிலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...

**நெல் கொள்முதல் விலையை உயர்த்த எந்தத் தீர்மானமும் இல்லை**

  நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மூலம் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்