தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டு வரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெயரில் மாற்றம் செய்வதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்று உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. 2004 ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி செயற்பட்டதை போல, தற்போது தமிழ் அரசு கட்சி செயற்பட்டதாக பரவலாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை சிறிதரனிடம் வழங்கலாமென இரா.சம்பந்தன் எடுத்த தீர்மானத்தின் எதிரொலியாக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் பின்னணியில் இந்த உடைவு ஏற்படுத்தப்பட்டது என, இரா.சம்பந்தனிடம் பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பல தரப்பும் சுட்டிக்காட்டியது. இதனால், அந்த தரப்புடனான நெருக்கத்தை இரா.சம்பந்தன் குறைத்திருந்தார். எம்.ஏ.சுமந்திரன் தரப்பில் செயற்பட்ட -கனடா இறக்குமதி திருகோணமலை குகதாசனையும் தனது இணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்ற பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஏனைய 3 கட்சிகளையும் இணைத்து, கூட்டமைப்பை பலப்படுத்தின.
அந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ள, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியை பயன்படுத்தினர். தேர்தலுக்கு அண்மையாக தமிழ் அரசு கட்சி திடீரென காலை வாரியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு-ரெலோ மற்றும் புளொட் என்பன தேர்தலை சந்திக்க முடியாதென்றும் கணக்குப் போட்டிருந்தது.
எனினும், சிறிய அவகாசத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற பதிவு செய்யப்பட்ட கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்தது.
உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக்குழு அண்மையில் கூடி, யாப்பு திருத்தம் செய்தது. அத்துடன் கட்சியின் பெயரையும் மாற்றும் தீர்மானத்தையும் எடுத்து, அது தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயரை, தமிழ் தேசிய கூட்டணியென மாற்றுவதற்காக விண்ணப்பித்திருந்தது.
இதற்கு தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சேபனையை பதிவு செய்தார். எனினும், இந்த ஆட்சேபணை கட்சியின் உத்தியோகபூர்வ ஆட்சேபனையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
தேர்தல் ஆணைக்குழுவின் வழக்கமான செயற்பாட்டின்படி, பெயர் திருத்தம் அல்லது பெயர் சூட்டலின்போது ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அந்த பெயர் உடனடியாக வழங்கப்படாது.
இதனால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தமிழ் தேசிய கூட்டணியென்ற பெயர் உடனடியாக வழங்கப்பட சாத்தியமில்லையென்றே தெரிகிறது.
எனினும், அந்த கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட எந்தவித சட்டத்தடைகளும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.




