கொழும்பு மேல் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக கூறப்படும் இரண்டு பிளாஸ்டிக் பைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் பணிபுரியும் இரண்டு உத்தியோகத்தர்களை கெசல்வத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் பைகளுடன் கைது செய்த போது, அவர்களிடம் ஹெரோயின் இல்லை என பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு பைகளிலும் ஹெரோயின் இருந்ததாகத் தெரியவருவதாகவும், அறிக்கைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த பைகளில் ஹெரோயின் வைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகளும் காணப்படுவதாகவும், அவை 2015 ஆம் ஆண்டு களஞ்சிய அறையில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்ற களஞ்சிய அறையில் பணியாற்றும் எழுத்தர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒருவர் திருட்டு குற்றச்சாட்டின் பேரிலும் மற்றைய நபர் திருட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.