ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முத்துவான் அன்சார் வயது (54) என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்று மாலை வழக்கம் போல் ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமை ஓடை குடாவில் மீன் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பாததினால் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டபோது அவர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடையில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (27) கண்டறியப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். கவத்தமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையின்; பாதுகாப்பு கருதி மின்சாரம் வேலிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார இணைப்பானது இறால் பண்ணைக்கு அப்பாலுள்ள நீரோடைக்கு குறுக்காவும் இணைக்கப்பட்டுள்ளது. இவ் ஓடையில் பொதுமக்கள் தங்களது நாளாந்த உணவிற்காக மீன் பிடிப்பது வழக்கமாகும்.விடயம் தெரியாத நபர் இச் சட்டவிரோ மின்சார இணைப்பில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
குறித்த இறால் பண்ணை உரிமையாளர் மேற்கொண்ட மின் இணைப்பிற்கு எதிராக அங்கிருந்தவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இறால் பண்ணை தவிர்ந்த பொதுமக்கள் பாவிக்கும் பொது இடங்களில் மின்சாரம் வழங்குவதை தடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை கடந்த காலத்தில் குறித்த இடத்தில் மின்சாரம் தாக்கி யானை ஒன்றும் 3 கால் நடைகளும் இறந்துள்ளதாக தெரிவித்தனர்.
-க.ருத்திரன்-