வாக்னர் ஆயுதக் குழுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்னர் தலைவர் பிரிகோஜின் ரஷ்யாவின் தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்குள் இருப்பதாகவும், நகரின் இராணுவ தளங்களை தனது போராளிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
“நாங்கள் (இராணுவ) தலைமையகத்திற்குள் இருக்கிறோம், அது காலை 7:30 (04:30 GMT)” என்று பிரிகோஜின் டெலிகிராமில் ஒரு வீடியோவில் கூறினார்.
“ரோஸ்டோவில் உள்ள இராணுவ தளங்கள், ஒரு விமான நிலையம் உட்பட, கட்டுப்பாட்டில் உள்ளன” என்று வாக்னர் தலைவர் கூறினார்.
வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் இராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில் ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.
உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ஜனாதிபதி புடினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தனியார் ஆயுதக்குழு, இராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. உக்ரைன் போரிலும் இந்த குழு கலந்து கொண்டு, அங்குள்ள பக்மூட் நகரத்தையும் கைப்பற்றியது.
இந்நிலையில் தான் வாக்னர் ஆயுதக் குழு ஓர் எச்சரிக்கை விடுக்க புடினால் வளர்க்கப்பட்ட குழுவால் தற்போது அவருக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் போரிட்டுக் கொண்டிருந்த போதே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்தளபதிகளுடன் இந்த குழுவின் தலைவர் பகிரங்கமாக முரண்பட்டு, அறிக்கைகள் விடுத்தார். ரஷ்ய இராணுவத்தளபதிகள் திறமையற்றவர்கள் என்றும், தனது குழுவுக்கு ஆயுதங்கள் சீராக விநியோகிக்கப்படுவதில்லையென்றும் குற்றம்சாட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, தனது போராளிகள் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்படி இராணுவம் ரொக்கட் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 2,000 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இது தவறான தகவல் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. அத்துடன் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் மீது குற்றவியல் விசாரணையை தொடங்கவுள்ளதாக அறிவித்தது.
இந்த பின்னணியில், இராணுவத்தலைமையை மிரட்ட, தனது படைகள் ரஷ்யாவுக்குள் நுழைவதாக யெவ்ஜெனி ப்ரிகோஸின் அறிவித்தார். தற்போது தெற்கு மாவட்டத்தில் இராணுவத்தலைமையகத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
தன்னுடன் பேச்சு நடத்த ரஷ்ய இராணுவத்தளபதிகள் அங்கு வர வேண்டுமென அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாஸ்கோ மேயர் செர்கெய் ஸோபியானின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வாக்னர் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஸ்டோவ் மற்றும் லிபெட்ஸ்க் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.