நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து. 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக விவசாய தன்னிறைவு, உற்பத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை தெரிவித்திருந்தார்.
நாட்டை முன்னேற்றும் ஜனாதிபதியின் யோசனைகளை கச்சிதமாக பிடித்துக் கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் குடும்பத்தினர், கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தில் 25 ஏக்கர் காணியை கோரியுள்ளனர்.
நாட்டில் இல்லாத தவிசாளரின் மனைவியின் சகோதரன் மற்றும் நாட்டில் வசிக்கின்ற மகனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரில் மர முந்திரிகை பயிர்ச் செய்கைக்கு என திட்ட முன்மொழிவை வழங்கப்பட்டு அரச காணி கோரப்பட்டுள்ளது.
2022.07.22 திகதியில் PV 00260992 என்ற கம்பனி பதிவிலக்கத்தை கொண்டுள்ள ERAVANAN INTERNATIONAL (PVT) LTD என்ற நிறுவனம், உருத்திரபுரம் பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் மனைவியின் முகவரியில்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஆரம்ப இயக்குநர்களாக ஜேர்மனியில் வசிக்கும் தவிசாளரின் மனைவியின் சகோதரனும், கிளிநொச்சியில் உள்ள தவிசாளரின் மனைவியின் மகனும் காணப்படுகின்றனர்.
திட்டமுன்மொழிவை கையளித்தது தொடக்கம் அதன் பின்னரான அனுமதி பெறும் வரைக்கும் அதிகாரிகளுடன் உரையாடி அழுத்தம் கொடுத்து காணியை பெறும் வரைக்கும் முன்னாள் தவிசாளர் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் திட்ட முன்மொழிவை வழங்கிய சம காலத்தில் வேறு சிலரும் காணி கோரி திட்ட முன்மொழிவை வழங்கியுள்ளனர் ஆனால் அவர்களது திட்டங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
எவ்வாறாயினும், முன்னாள் தவிசாளருக்கு காணி வழங்கப்படும் கட்டத்தை நிர்வாக செயன்முறை எட்டியுள்ளது.
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பலர் வேலையற்றவர்களாக உள்ளனர். இவர்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன், முன்னாள் தவிசாளர் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்திருக்கலாம் என கிளிநொச்சியிலுள்ள தமிழ் அரசு கட்சியினர் கூறுகின்றனர்.
மரமுந்திரிகைக்கு உள்ளூரிலும் நல்ல சந்தை வாய்ப்புள்ளது. உமையாள்புரத்தில் 25 ஏக்கரில் வெற்றிகரமாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவில் பண்ணையை தவிசாளர் விஸ்கரிக்கக்கூடும். இதனால் நாட்டக்கு அன்னிய செலவாணி வருவாயும் கிடைக்கும்.
நாட்டுக்கு அன்னிய செலாவணி வருவாயை ஈட்ட வேண்டுமென்றும், கிளிநொச்சியில் வேலைவாய்ப்பின்மையை இல்லாமலாக்க வேண்டுமென்றும் சமூக சிந்தனையுடன் முன்னாள் தவிசாளர் குடும்பம் இந்த காணியை கோரியுள்ளது. அவரது செயற்பாட்டை கிளிநொச்சியிலுள்ள தமிழ் அரசு கட்சியினர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
முன்னாள் கரைச்சி தவிசாளரை முன்னுதாரணமாக கொண்டு, இளைஞர்கள் திட்ட முன்மொழிவுகளை வழங்கி, சுயதொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டுமென கிளிநொச்சி நலனில் அக்கறையுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தவிசாளர் பினாமி பெயரில் காணி பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் மற்றொரு விமர்சனமும் வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இதில் எது சரியென்பது காணி கிடைத்த பின்னர் தவிசாளரின் செயற்பாட்டிலிருந்து தெரிய வரும்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2023/06/3-1.jpg)