‘தென்னிலங்கை அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவே தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகள் உள்ளன’:.அரசியல்குழு கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்!

Date:

சிங்கள அரசாங்கங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை போல- அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதை போலவே, இலங்கை தமிழ் அரசு கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளது என்ற காட்டமான விமர்சனம், அந்த கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த தீவிரமான விமர்சனம் முன்வைக்கப்பட்டபோது, மூத்த தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா உள்ளிட்ட பிரமுகர்கள் கனத்த மௌனத்துடன் அந்த விமர்சனத்தை செவிமடுத்துக் கொண்டிருந்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று  (6) கொழும்பில், இரா.சம்பந்தனின் வீட்டில் நடைபெற்றபோது இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தின் போது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஒரு முக்கிய விவகாரத்தை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி வெளியேறியது தவறு என்றார். இது பொறுப்புணர்வற்ற நடவடிக்கை, இனநோக்கில் அல்லாமல் வட்டார வேட்பாளர்களின் நிலையிலிருந்து எடுத்த முடிவு என்றார்.

ஜனாதிபதி, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தரப்புக்களை சந்திக்கும் போது இலங்கை தமிழ் அரசு கட்சி செல்கிறது. அவர்கள் தனித்து செல்கிறார்கள். இது உடனடியாக அல்லாவிட்டாலும் தீர்வு விவகாரத்தில், தீர்வு நோக்கி பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

மாவை சேனாதிராசாவின் கருத்தை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசாவும் ஆமோதித்து கருத்து தெரிவித்தார்.

“இலங்கை தமிழ் அரசு கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் சிங்கள அரசாங்கங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை போல, அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதை போலுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்க வேண்டும், தமிழ் மக்களை பலவீனப்படுத்த வேண்டுமென்பது சிங்கள தரப்பின் விருப்பம். அதை இலங்கை தமிழ் அரசு கட்சியே செய்கிறது.

எங்களுக்கு மற்றக் கட்சிகளில் உள்ள தனிநபர்களுடன் உள்ள கோபத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்க முடியாது. வீடு தனியொருவரின் வீடல்ல. இது மக்களின், மக்களிற்காக உருவாக்கப்பட்ட வீடு. நாங்கள் இன்று இருப்போம். போய் விடலாம். ஆனால் வீட்டை சிதைத்து விட்டு செல்ல முடியாது.

களுவாஞ்சிக்குடியில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்த போது நான் ஒருவன்தான் கூறினேன், உள்ளூராட்சி தேர்தல் நடக்கவே நடக்காது. நடக்காத தேர்தலுக்காக பிரிந்து செல்லக்கூடாது. அப்படி முடிவெடுப்பது தவறு என்றேன். உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலரை திருப்திப்படுத்த எடுக்கும் இந்த முடிவின் பாரதூரதன்மையை தெளிவாக சுட்டிக்காட்டினேன். இன்று உள்ளூராட்சி தேர்தல் இல்லை. விட்ட தவறை உணர்ந்து, மீண்டும் கூட்டமைப்பை உருவாக்கி, ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளை இழந்துள்ளோம். அந்த பாதிப்பு இன்றும் எங்கள் மனங்களில் உள்ளது. நாங்கள் எமது காலத்தில் எமது பொறுப்பை ஏற்று இயன்றவரை செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தனித்து போட்டியிடப் போகிறோம் என கூறிவிட்டு முல்லைத்தீவில் முஸ்லிம் தரப்புடன் எப்படி கூட்டு வைத்துள்ளீர்கள்?

தனிப்பட்டரீதியில் எனக்கு யாருடனும் எந்த கோபமும் இல்லை.நான் சட்டத்தரணி. நீதிமன்றத்தில் பலருடன் வாதிடுவேன். பின்னர் அவர்களுடன் சண்டைபிடித்துக் கொண்டிருப்பதில்லை. நான் கட்சியின் கொள்கைரீதியிலேயே பேசுகிறேன்.

கட்சியின் தலைவர் என ஒருவர் உள்ளார். எந்த முடிவெடுப்பதென்றாலும் அவருக்கு தெரிந்தே எடுக்க வேண்டும். அவருக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். தலைவர் யாராவும் இருக்கலாம். தலைவருக்கு தெரியாமல் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

உங்களுக்கு செல்வம் அடைக்கலநாதனுடன், மட்டக்களப்பில் ஜனாவுடன் தனிப்பட்ட கோபங்கள் யாருக்கும் இருக்கலாம். தனிப்பட்ட கோபங்களை கட்சியின் செயற்பாடுகளில் செயற்படுத்த முடியாது என்றார்.

இந்த கூட்டத்தின் போது, முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம் பேச ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பித்த போது, கூட்டத்திற்கு வந்த சிலர் தூங்க ஆரம்பித்தனர். அவர்கள் குட்டித்தூக்கம் போட்டு எழுந்த பின்னரும் துரைராசிங்கம் பேச்சை நிறுத்தவில்லை. சொந்தக்கதை சோக்கதைகளை புலம்பிக் கொண்டிருந்தார். அவரது புலம்பலை பொறுக்க முடியாத கட்டத்தில, கூட்டத்திலிருந்தவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து, மாவை சேனாதிராசா தலையிட்டு, உங்கள் சொந்தக்கதைகளை பேசி நேரத்தை வீணடிக்காமல் தேவையான விடயத்தை மட்டும் பேசுங்கள் என்றார்.

இதன் பின்னரே அவரது பேச்சை நிறுத்த முடிந்தது.

இந்த கூட்டத்தின் போது, கட்சியின் அரசியல் யாப்பு திருத்தம் பற்றியும் ஆராயப்பட்டது.

யாப்பு திருப்பதம் பற்றி கடந்த மத்தியகுழு கூட்டத்திலும் ஆராயப்பட்டது. இப்போது, தமிழ் அரசு கட்சியின் யாப்பில், கட்சியின் நோக்கம் பற்றிய குறிப்பில் திருத்தம் செய்ய ஆராயப்பட்டது.

கட்சியின் யாப்பில், நோக்கம்- ஐக்கிய இலங்கை இணைப்பாட்சியின் அங்கமாக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின்படி ஒரு சுயாட்சித் தமிழரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையை காண்பதே இக் கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுயாட்சி முஸ்லிம் அரசு என்பதை நீக்கும்படி கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்துகிறார்கள். முல்லைத்தீவில் தராசு சின்னத்துடன் கூட்டணி வைத்த தரப்பினர் அதை எதிர்க்கிறார்கள். அதை நீக்கினால் முல்லைத்தீவில் வாக்கு கிடைக்காதென்பது அவர்களின் நிலைப்பாடு. மறுவளமாக, சுயாட்சி முஸ்லிம் அரசு என்பதை வைத்திருப்பது கிழக்கு தமிழ் மக்களை அதிருப்தியடைய வைக்கும் என்பது இன்னொரு தரப்பின் வாதம்.

கடந்த மத்தியகுழு கூட்டத்தில் இது காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய சீ.யோகேஸ்வரன், கிழக்கு மக்களின் உணர்வுகளை வடக்கு தலைமையை கொண்ட தமிழ் அரசு கட்சி புரிந்து கொள்ளாதா? தமிழ் அரசு கட்சியிலும் கிழக்கு மக்கள் ஒதுக்கப்படுகிறார்களா? என காரசாரமாக கேள்வியெழுப்பியிருந்தார்.

நேற்றைய கூட்டத்தில், தமிழ் சுயாட்சி, முஸ்லிம் சுயாட்சி என்ற வாசகங்களை நீக்கி, தமிழ் பேசும் மக்கள் என பொதுவாக குறிப்பிடலாமென யோசனை தெரிவிக்கப்பட்டது. இரா.சம்பந்தனும் அதை சாதகமாக எடுத்துக் கொண்டார். எனினும், இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்