இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கடத்தல்காரர்களால் கடலுக்குள் வீசப்பட்ட நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் இந்திய கடலோரக் காவல் படையினர் அவற்றை மீட்டிருக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை கிராமத்தின் வழியாக இலங்கையிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கடத்தப்படவிருப்பதாக, தேசிய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் மண்டபம், வேதாளை, மரக்காயர்பட்டினம் கடற்கரை கிராமங்களில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் 30ஆம் திகதி இரவு வேதாளை கடற்கரை கிராமத்திற்கு நாட்டு படகில் வந்த வேதாளை கிராமத்தைச் சேர்ந்த முகமது நாசர், அப்துல் ஹமீது, ரவி ஆகியோரை பிடித்து படகை சோதனை செய்தபோது அதில் மூன்று கிலோ தங்ககட்டி பார்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் மேலும் சில தங்க கட்டி பார்சல்களை கொண்டு வந்ததாகவும் கடற்கரையில் கண்காணிப்பது தெரிந்து அதனை கடலில் வீசிவிட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படை உதவியுடன் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தங்கத்தைத் தேடும் பணி நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், இந்தத் தங்கக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட வேதாளையைச் சேர்ந்த சாதிக் அலி, முகமது அசார் ஆகியோரைக் கைதுசெய்து அவர்களிடம் துருவித் துருவி நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளிலுள்ள வியாபாரிகளுக்கு விற்பதற்காக 33 கிலோ தங்கத்தைக் கடத்திவந்திருப்பது தெரியவந்தது.
கடத்தல்காரர்கள் தங்கத்தை வீசியதாகக் கூறிய இடத்தில், நேற்று முன்தினம் முழுவதும் தேடியும் தங்கம் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை கடத்தல்காரர்களில் ஒரு நபரை மற்றொரு படகில் இந்தியக் கடலோரக் காவல் படையினர் அழைத்துச் சென்று, கடலில் வீசப்பட்ட இடத்தை நேரடியாக அடையாளம் காண்பிக்கவைத்து, அந்த இடத்தில் ‘ஸ்கூபா டைவிங்’ வீரர்களை வைத்து, ஆழ்கடலுக்குள் கிடந்த தங்கக் கட்டி பார்சல்களை மீட்டு மேலே கொண்டுவந்தனர்.
மீட்கப்பட்ட தங்கக் கட்டி பார்சல்களை இந்திய கடலோரக் காவல் படை முகாமுக்குக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் தங்கக் கட்டிகளாகவும், தங்க பிஸ்கட்டுகளாகவும் 32.869 கிலோ கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ.20.2 கோடி இந்திய ரூபா என இந்தியக் கடலோரக் காவல் படை தெரிவித்திருக்கிறது.
கடத்திவரப்பட்ட தங்கக் கட்டி பார்சல்களில் தனித் தனி எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இது குறித்து கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவை வெவ்வேறு வியாபாரிகளுக்குக் கொடுப்பதற்காகப் போடப்பட்ட அடையாள எண்கள் எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரையும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சென்னை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தங்கக் கடத்தல் கும்பல் குறித்தும், அவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் தமிழக வியாபாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் கடத்தல்காரர்களால் 17 கிலோ தங்கம் கடலில் வீசப்பட்டு, மீட்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதேபோல் கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



